மதுரை ஒத்தக்கடையில் முன்னாள் அமைச்சர் ராஜ. கண்ணப்பன் தனது ஆதரவாளர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
இந்த விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின், கே.என். நேரு, ஐ.பெரியசாமி, மதுரை புறநகர் மாவட்ட திமுக செயலாளர்கள் பி.மூர்த்தி, மணிமாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழா மேடையில் ராஜ. கண்ணப்பன் கலைஞர் அறக்கட்டளைக்கு 50 லட்ச ரூபாய்க்கான காசோலையை ஸ்டாலினிடம் வழங்கினார்.
பின்னர், விழாவில் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், "சங்கம் வைத்து முத்தமிழ் வளர்த்த மதுரையில் விழா நடைபெறுகிறது. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற கூறும் தலைநகரில் இந்த விழா நடக்கிறது. இந்த விழா வரும் காலத்தில் நமது வெற்றியை எதிரொலிக்கும். ராஜ. கண்ணப்பன் என்னிடம் வந்து தேதி கேட்டார். திமுகவில் இணைய தேதி வேண்டும் என கேட்டார். தற்போதும் இந்தக் கட்சியில் தானே இருக்கிறீர்கள் என கேட்டேன். அவர் முக்கியமான நேரத்தில் வந்து சேர்த்துள்ளார். ராஜகண்ணப்பன் ஒரு தனி நபர் அல்ல. அவரிடம் எப்போதும் ஒரு கூட்டம் உள்ளது" என்றார்.
மேலும் பேசிய அவர், “தமிழ்நாட்டின் கடன் சுமை அதிகரித்துள்ளது. திமுக ஆட்சியில் ரூ.1 லட்சம் கோடியாக இருந்த கடன் தற்போது ரூ.4 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்த அரசு, அதிகளவில் கடன் மட்டுமே வாங்குகிறது. மக்களுக்கு திட்டங்களை நிறைவேற்றவில்லை. தமிழ்நாட்டின் நிதிநிலைமை கோமாவில் இருக்கிறது” என்று விமர்சித்தார்.
இதையும் படிங்க...'களியும் கறிக்குழம்பும்' - எளிய மக்களின் வலிமையான உணவு