மதுரை:திருநெல்வேலி மாவட்டம் கருத்தப்பிள்ளையூர் கிராமத்தைச் சேர்ந்த வின்சென்ட் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "தென்காசி மாவட்டத்திலுள்ள கடையம், குற்றாலம் மற்றும் கடையநல்லூர் ஆகிய பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியின் அடிவாரத்தில் அமைந்துள்ளன. இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள மக்கள் பிரதான தொழிலாக விவசாயம் செய்து வருகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் யானைகள், காட்டுப்பன்றிகள், குரங்குகள், கரடிகள், புலிகள், சிறுத்தைகள், மான், மிளா மான் என பல்வேறு விலங்குகள் வசித்து வருகின்றன. இதில் பல விலங்குகள் விவசாய நிலத்திலுள்ள மரங்கள், பயிர்களை சேதப்படுத்துவதுடன் சில நேரங்களில் மனிதர்களையும் தாக்குகின்றன. சமீபத்தில் கரடி தாக்கி இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். அதே போல் தென்னை மரங்கள், வாழை மரங்கள், பயிர்கள் ஆகியவை வனவிலங்குகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
ஆகவே, வனவிலங்குகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அதிநவீன மருத்துவ உதவிகள் மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு போதிய இழப்பீடு தரப்படுவது அவசியம். மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் எல்லைப் பகுதிகளில் சூரிய மின்சக்தியால் இயங்கக்கூடிய மின் வேலிகள் அமைத்து, விலங்குகள் கிராமங்களுக்குள் வருவதை தடுக்க கோரி மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, தென்காசி மாவட்டம் கடையம், குற்றாலம், கடையநல்லூர் மற்றும் மேற்கு தொடர்ச்சி எல்லைப் பகுதிகளில் சூரிய மின்சக்தியால் இயங்கக்கூடிய மின்வேலிகள் அமைக்க உத்தரவிட வேண்டும்" என வலியுறுத்தியிருந்தார்.