மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் மதுரை மாநாகராட்சி தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. அடுத்ததாக மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவர உள்ளது . ஆனால், தமிழ்நாட்டின் மிகப்பெரிய நகராட்சிகளில் ஒன்றான, மதுரை மாநகராட்சியில் நான்கு மண்டலமாக 100 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளை மறு வரையறை செய்ததில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது. உரிய விதிகளை பின்பற்றி வார்டு மறுவரையறை செய்யவில்லை.
மேலும், தமிழ்நாடு மறுவரையறை சட்டம் மற்றும் தமிழ்நாடு உள்ளாட்சி வரையறை ஒழுங்குமுறை சட்டம் 2017 ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதலின்படி மதுரை மாநகராட்சியில் வார்டுகள் மறு வரையறை செய்யவில்லை. வரையறை செய்யும் பொழுது ஒரு வார்டில் மறு வரையரை செய்த பிறகு வரையறைக்கு முன்னதாக இருந்த வாக்காளர்களில் 10 சதவிகிதத்திற்கும் மேல் மக்கள் தொகை அதிகமாக இருக்கக் கூடாது என்று விதிமுறை உள்ளது.
ஆனால் மதுரை மாநகராட்சியில் அவ்வாறு இல்லை. ஒவ்வொரு வார்டிலும் ஒரே சராசரியான வாக்காளர்களை கொண்டு பிரிக்கப்படவில்லை. அதற்கு மாறாக ஒரு வார்டில், மிக அதிக வாக்காளர்களும் , ஒரு வார்டில் மிக குறைந்த வாக்காளர்களும் என வேறுபாடுள்ளது. உதாரணமாக, ஒரு வார்டில் 12, 875 வாக்காளர்களும், ஒரு வார்டில் 7,215 வாக்காளர்களும் உள்ளனர். அதிகபட்சமாக 100ஆவது வார்டில் 19, 818 வாக்காளர்கள் உள்ளனர். எனவே புதிய விதிமுறையைப் பின்பற்றி இந்த வார்டு வரையறை செய்யவில்லை. ஆளும் கட்சியினுடைய அமைச்சர் தொகுதியில் வரையறை விதிகள் மீறப்பட்டுள்ளன.