மதுரை:பள்ளிக் குழந்தைகளுக்கான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரையில் தொடங்கி வைத்தார். இது தொடர்பான நிகழ்ச்சி மதுரை கீழ அண்ணாதோப்பு பகுதியில் அமைந்துள்ள ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.
அப்போது கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு ரூபாய்க்கு உணவு வழங்கி வரும் கமலாத்தாள் பாட்டிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செய்தார். 'நூற்றாண்டு கண்ட கல்விப் புரட்சி' என்னும் நூலை முதலமைச்சர் வெளியிட, அதன் முதல் பிரதியை கமலாத்தாள் பாட்டி பெற்றுக் கொண்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், 'அண்ணாவின் பிறந்தநாளில் இந்தத் திட்டத்தை தொடங்கி வைப்பதில் பெரிதும் மகிழ்ச்சியாக உள்ளது. காலை உணவு உண்ண முடியாத காரணத்தால் குழந்தைகளின் கற்றல் திறன் மற்றும் வருகைப்பதிவு மிகவும் குறைந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அதன் அடிப்படையில், பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவை உறுதி செய்யவே இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளோம். நூறாண்டுகளுக்கு முன்பு இதே நாளில் சென்னை மாகாணத்தில் ஆட்சியிலிருந்த நீதிக்கட்சியின் சர் பி.டி.தியாகராயர், சென்னையிலுள்ள பள்ளிகளில் உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
பிறகு ஆங்கிலேய ஆட்சியாளர்களால் அத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் கடந்த 1957 ஆம் ஆண்டு காமராஜரால் மதிய உணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. 1971 ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் கருணாநிதியால் கர்ப்பிணி மற்றும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
பிறகு ஆட்சிக்கு வந்த எம்ஜிஆர், அதனை சத்துணவுத் திட்டமாக விரிவுபடுத்தினார். மேலும் கூடுதல் மையங்களைத் திறக்கவும் உத்தரவிட்டார். கடந்த 1989 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கருணாநிதி, பல்வேறு பொய் பரப்புரைகளை முறியடித்து சத்துணவுத் திட்டத்தை தொடர்ந்ததுடன், கூடுதலாக முட்டை வழங்கும் திட்டத்தையும் அறிவித்தார்.