மதுரை:தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜெகதீசன் நேற்று (ஏப். 25) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வருவாய் நம் நாட்டில் அதிகபட்சமாக ரூ. 1.42 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது 0 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருக்கும் அப்பளம், வெல்லம் போன்ற பொருள்களுக்கு 5 விழுக்காடு வரியாக மாற்றப்பட்டுள்ளது.
18% - 28%:தோல் ஆடைகள், அணிகலன்கள், கைக்கடிகாரங்கள். ஷேவ் ரேஷர்கள், வாசனைத் திரவியங்கள், சேவ் செய்வதற்கு முன் / ஷேவ் செய்வதற்குப் பின் உபயோகப்படுத்தப்படும் பொருள்கள், சாக்லேட்டுகள், வேஃபர்ஸ், கோகோ பவுடர், மது அல்லாத பானங்கள், கைப்பைகள், ஷாப்பிங் பேக்குகள், செராமிக் சிங்க், வாஷ் பேசின், பிளைவுட் கதவுகள், ஜன்னல்கள், சுவிட்சுகள், சாக்கெட்ஸ் போன்ற மின் சாதனங்கள் 18 சதவிகித வரியில் இருந்து 28 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது.
வால்நட் பருப்புகள் 5 சதவிகிதத்தில் இருந்து 12 விழுக்காடாகவும், கஸ்டாட் பவுடர் 5 விழுகாடு வரி விதிப்பில் இருந்து 18 விழுக்காடாகவும் மாற்றப்பட்டுள்ளது. இத்தனை பொருள்களுக்கான வரிகள் மாற்றத்திற்கு ஜிஎஸ்டி கவுன்சில் முன்மொழிந்துள்ளது. மொத்தத்தில், 143 பொருள்களில் சுமார் 92 பொருள்களை 18 விழுக்காடு வரி விதிப்பில் இருந்து 28 விழுக்காடு வரி விதிப்புக்கு மாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
பாதிப்படையும் சாமனியர்கள்: கரோனோ தொற்று நோய் தாக்கத்திற்குப் பின்பு, தொழில் வணிகத் துறை, குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை (MSMEs) மிகுந்த சிரமத்திற்கிடையே தற்போது சற்றே மீண்டு வந்துள்ளது. தொழில் வணிகத் துறையினரும், பொதுமக்களும் ஏற்கனவே 14.5 விழுக்காடு மொத்த விலை பணவீக்கத்தாலும், 7.5 விழுக்காடு சில்லறை பணவீக்கத்தாலும் பாதிப்படைந்துள்ளனர்.