மதுரை : மதுரை மாவட்டத்தின் பாரம்பரிய அடையாளங்களுள் ஒன்றாகத் திகழ்வது ஜல்லிக்கட்டு. ஒவ்வொராண்டும் பொங்கலை முன்னிட்டு அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் காளைகளுக்கும், மாடு பிடி வீரர்களுக்கும் மிகப் பெரிய சவாலாகும்.
சுற்றிலும் அமைக்கப்பட்ட மேடையில் பார்வையாளர்களின் விசில் சத்தமும், கைதட்டலும் விண்ணதிர, வாடிவாசலிலிருந்து பாயும் காளைகளும் திமிலைப் பிடித்து வலிமை காட்டும் காளையர்களும் ஒன்று சேர சீருடையுடன் அணிவகுத்து நிற்பது கண்கொள்ளாக் காட்சியாகும். 'பிடித்துப் பார்' என்று சவால் விடும் காளை உரிமையாளர்களும், 'பிடித்துக் காட்டுகிறேன்' என்று தொடை தட்டி முறுக்கி நிற்கும் வீரர்களும் ஜல்லிக்கட்டு விளையாட்டின் சுவாரஸ்யங்கள்.
ஜல்லிக்கட்டு
இந்த ஆண்டு கரோனா 3ஆவது அலையை முன்னிட்டு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில், மதுரையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கும் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படக்கூடும் எனத் தெரிகிறது. ஆனாலும், மதுரை மாவட்டம் முழுவதும் காளைகளும், மாடு பிடி வீரர்களும் ஆங்காங்கே தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ளது தேனூர் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக் காளைகளை வளர்ப்பதுடன், மாடுபிடி வீரர்களாகவும் உள்ளனர். ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்காக இளைஞர்கள் பயிற்சி எடுத்துக் கொள்வதுடன், காளை மாட்டின் உரிமையாளர்களும் தங்களது மாடுகளுக்குத் தேவையான உணவுகள் வழங்கி, பயிற்சிகளும் அளித்து வருகின்றனர்.
மாடுகள் தயார்படுத்தல்
தேனூர் கிராமத்தைச் சேர்ந்த ரிஷிகரன் கூறுகையில், 'என்னுடைய காளையின் பெயர் கருப்பு. தற்போது நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுக்காக தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
வாரந்தோறும் நீச்சல் பயிற்சி அளிப்பதுடன், நாள்தோறும் நடைபயிற்சியும் அளித்து வருகிறேன். ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்வதற்கு ஒரு சில நாளிலிருந்து பருத்தி விதை, குச்சிப்புண்ணாக்கு, உளுந்தம் தூசி ஆகியவற்றை உணவாகக் கொடுத்து வருகிறேன்' என்கிறார்.
மாடுபிடி வீரர் பேட்டி
தேனூர் வைகையாற்றில் சனி ஞாயிற்றுக் கிழமைகளில் ஊரிலுள்ள காளைகள் அனைத்தும் அழைத்து வரப்பட்டு நீச்சல் பயிற்சி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் அதிகாலை 5.30 மணியளவில் நடைபயிற்சிக்கும் அழைத்துச் செல்கின்றனர். பிறகு காலை 9 மணியளவில் ஒதுக்குப்புறமான பகுதியில் காளையோடு இளைஞர்கள் பயிற்சி மேற்கொள்கின்றனர்.