மதுரை: ஜனவரி மாதம் மத்திய தொல்லியல் ஆலோசனை வாரியக்கூட்டம் நடைபெற்றது. அப்போது தமிழகத்தில் 2023-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அகழாய்வுக் கள இடங்களுக்கு தமிழக தொல்லியல் துறையின் சார்பாக அனுமதி கோரப்பட்டது. இதற்கு மத்திய தொல்லியல் ஆலோசனை வாரியம் அனுமதி அளித்துள்ளது.
தமிழக தொல்லியல் துறையின் சார்பாக சிவகங்கை மாவட்டம், கீழடி உட்பட, புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம், திருவள்ளூர் மாவட்டம் பட்டறைப் பெரும்புதூர், திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி, திருவண்ணாமலை மாவட்டம் கீழ் நமண்டி, தருமபுரி மாவட்டம் பூதிநத்தம் ஆகியப் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள மத்திய தொல்லியல் ஆலோசனை வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதில் கீழடி, வெம்பக்கோட்டை, துலுக்கர்பட்டி, கங்கை கொண்ட சோழபுரம் ஆகியவற்றில் தொடர் அகழாய்வு நடைபெற்று வருகிறது. கடந்த 2016-ஆம் ஆண்டிற்குப் பிறகு பட்டறைப் பெரும்புதூரில் இந்த ஆண்டு அகழாய்வு தொடங்குகிறது. பொற்பனைக்கோட்டை, பூதிநத்தம், கீழ் நமண்டி ஆகிய பகுதிகளில் இந்த ஆண்டு அகழாய்வுப் பணிகள் துவங்குகின்றன.