நெல்லை ரயில் நிலையத்தில், மதுரை கோட்ட இந்தி மொழி அதிகாரி சீனிவாசன் பங்கேற்ற விழாவில், 'புத்தகத்துடன் ஒரு செல்ஃபி' என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. மதுரை கோட்டத்தில் 10 இந்தி நூலகங்கள் உள்ளன. இத்திட்டத்தின்படி நூலகங்களை நோக்கி தொழிலாளர்களை வர செய்வதற்காகவும் தொழிலாளர்களிடையே படிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காகவும் “புத்தகத்துடன் ஒரு செல்ஃபி” என்ற புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளார்கள்.
தொழிலாளர்கள் ஏதாவது ஒரு நூலகத்திற்கு சென்று ஒரு புத்தகத்தை எடுத்து செல்ஃபி எடுத்து மதுரை கோட்ட இந்தி அதிகாரியின் செல்பேசி எண்ணுக்கு அனுப்ப வேண்டும். எந்தத் தொழிலாளி அதிகமாக புத்தகத்தோடு செல்ஃபி எடுத்து அனுப்புகிறாரோ, அவருக்கு மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் வீ .ஆர். லெனின், மார்ச் மாத இறுதியில் பரிசுகள் வழங்குவார். இதில், கலந்து கொள்பவர்கள் ஒரு நாளில் ஒரு செல்ஃபிதான் அனுப்ப முடியும் என்பது நிபந்தனை.
இது இந்தி மொழியை மறைமுகமாக தொழிலாளர்களிடம் திணிக்கும் முயற்சிதான் என்று பல்வேறு தரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகத்தின் தரப்பில், நூலகங்களுக்கு தொழிலாளர்கள் வருவதேயில்லை என்ற நிலையை மாற்றவும், வாசிப்பினை ஊக்குவிக்கவும் இந்தி நூல்கள் மட்டுமன்றி, தொழிலாளர்கள் வாசிக்க விரும்பும் ஆங்கிலம், தமிழ், மலையாளம் போன்ற பிற மொழி நூல்களோடும் செல்ஃபி எடுத்து அனுப்பலாம் என்றுதான் அறிவுறுத்தியுள்ளோம் என்று விளக்கம் தரப்பட்டுள்ளது.
மேலும், மதுரை கோட்டத்தில் பிற்பகல் 2 மணியிலிருந்து 3.30 மணி வரை திறந்துள்ள இந்தி நூலகத்தில் பிற மொழி நூல்களும் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக யாரும் அதனைப் பயன்படுத்துவதில்லை. அதனைத் தவிர்ப்பதற்காகவே இத்திட்டத்தை அறிவித்துள்ளோம் எனக் கூறப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் இதுகுறித்து வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், 'இந்தி நூல்களைப் படிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக தமிழ் உள்ளிட்ட பிறமொழி நூல்களையும் அங்கே வைத்து, 'இனிப்பு' காட்டி ஈர்க்கும் உத்திதான் இது! நூலுடன் செல்ஃபி அதிகமாக எடுத்துக் கொண்டவர்களுக்கு பரிசு என்று சொல்வதிலும், காலப்போக்கில் அல்லது இப்போதேகூட இந்தி புத்தகங்களுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வோர்க்கு மட்டுமே பரிசு வழங்கப்படும் என்ற அச்சம் உள்ளது.