மதுரை:தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் சினிமா படங்களின் வசூலை போன்று டாஸ்மாக் வருமானமும் ஊடகங்களில் பிரேக்கிங் நியூஸாக இருந்து வருவது வழக்கம். நிறுவனங்கள், ஆலைகளை மூடினாலும் டாஸ்மாக் மதுக்கடைகளை மட்டும் மூடுவதற்கு எந்த அரசும் தயாராக இருந்ததில்லை. காரணம் அதில் இருந்து கிடைக்கும் பெரும் பணம் தான் பல்வேறு நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் அந்த அரசு மதுபானக்கடை கூட சில ஆண்டுகள் நஷ்டத்தில் இயங்கி உள்ளது என்றால் நம்ப முடிகிறதா? மதுரையைச் சேர்ந்த காசிமாயன் என்பவர் ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் பதிலளித்துள்ளது.
2010 - 2012
கடந்த 2010-2011 ஆம் ஆண்டு ரூ.11 ஆயிரத்து 158 கோடி (ரூ. 11,158.54) ரூபாயில் கொள்முதல் செய்யப்பட்ட மது, ரூ.17 ஆயிரத்து 827 கோடிக்கு (ரூ.17,827.09) விற்பனை செய்யப்பட்டது. அந்த ஆண்டு செலவு மட்டும் ரூ.18 ஆயிரத்து 309 கோடி( ரூ.18,309.96). நிகர இழப்பு ரூ. 3 கோடியே 56 லட்சம் (ரூ.3.56) .
அதேபோல் கடந்த 2011-2012 ஆம் ஆண்டில் ரூ.13 ஆயிரத்து 673 கோடிக்கு (ரூ.13,673.24) கொள்முதல் செய்யப்பட்ட மது, ரூ.21 ஆயிரத்து 137 கோடிக்கு (ரூ.21,137.68 ) விற்பனை செய்யப்பட்டது. அந்த ஆண்டு செலவு மட்டும் ரூ.12 ஆயிரத்து 696 (ரூ.12,696.75 ) கோடியாகும். நிகர இழப்பு ரூ.1 கோடியே 25 லட்சம் (ரூ.1.25).
2012 -2014
கடந்த 2012-2013 ஆம் ஆண்டில் ரூ. 15 ஆயிரத்து 858 கோடி (ரூ.15,858.38) கொள்முதல் செய்யப்பட்ட மது, ரூ. 24 ஆயிரத்து 371 கோடிக்கு (ரூ.24,371.15) விற்பனை செய்யப்பட்டது. அந்த ஆண்டு செலவு மட்டும் ரூ. 25 ஆயிரத்து 149 கோடி ( ரூ.25,149.69) ஆகும். நிகர இழப்பு ரூ. 103 கோடியே 64 லட்சம் (ரூ.103.64).
2013-2014 ஆம் ஆண்டில் ரூ.13 ஆயிரத்து 628 கோடி ரூபாயில் (ரூ.13,628.48) கொள்முதல் செய்யப்பட்ட மது, ரூ. 25 ஆயிரத்து 408 கோடிக்கு (ரூ.25,408.78) விற்பனை செய்யப்பட்டது. அந்த ஆண்டு செலவு மட்டும் ரூ.25 ஆயிரத்து 783 கோடியாகும் (ரூ.25,783.15). நிகர இழப்பு ரூ.64 கோடியே 44 லட்சம் (ரூ.64.44) ஆகும்.
2019-2020
கடந்து 2019-2020 ஆம் ஆண்டில் ரூ.20 ஆயிரத்து 293 கோடி (ரூ.20,293.91) ரூபாயில் கொள்முதல் செய்யப்பட்ட மது, ரூ.20 ஆயிரத்து 587 கோடிக்கு (ரூ.20,587.82) விற்பனை செய்யப்பட்டது. அந்த ஆண்டு செலவு மட்டும் ரூ.20 ஆயிரத்து 954 கோடியாகும் (ரூ.20,954.09). நிகர இழப்பு ரூ.71 கோடியே 93 லட்சம் (ரூ.71.93).
ஒரே ஆண்டில் 232 கோடி லாபம்
இதுகுறித்து ஆர்டிஐ ஆர்வலர் காசிமாயன் கூறுகையில், "கடந்த 2004-2005 ஆம் ஆண்டில் ரூ. 3 ஆயிரத்து 525 கோடிக்கு (ரூ.3,525.14) கொள்முதல் செய்யப்பட்ட மதுபானம், ரூ. 5 ஆயிரத்து 878 கோடிக்கு (ரூ.5,878.33) விற்பனை செய்யப்பட்டுள்ளது. செலவு ரூ. 5 ஆயிரத்து 979 கோடி (ரூ.5,979.77). அந்த ஆண்டு மட்டும் நிகர லாபம் ரூ.232 கோடியாகும் (ரூ.232.72) .
டாஸ்மாக் மூலம் மதுபானம் விற்பனை தொடங்கப்பட்ட ஆண்டில் நிகரலாபம் மிக அதிகமாக உள்ள நிலையில், அடுத்தடுத்த ஆண்டுகளில் அதன் லாபம் வேகமாக குறையத் தொடங்கியிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அப்படியானால் டாஸ்மாக் வருமானம் எங்கே செல்கிறது என்ற கேள்வியும் எழுகிறது.
இப்படியாக நஷ்டத்தில் இயங்குகின்ற டாஸ்மாக் நிறுவனத்தை ஏன் அரசாங்கம் நடத்த வேண்டும்? தமிழ்நாடு முழுவதும் மதுவால் பாதிக்கப்படுகின்ற குடும்பங்கள் நிறைய இருக்கின்ற நிலையில், இதுபோன்று இழப்பில் இயங்கக்கூடிய ஒரு நிறுவனம் தேவைதானா? என்பதை தமிழ்நாடு அரசு கணக்கில் கொள்ள வேண்டும்" என்கிறார்.
லாபம் ரூ. 300 கோடி; நஷ்டம் ரூ.245 கோடி
மேலும் அவர் கூறுகையில், "16 ஆண்டுகளுக்கான பட்டியலில் 2009-2010 & 2015-2016 ஆகிய குறிப்பிட்ட இரண்டு வருடங்கள் பற்றிய தகவலை மறைக்க வேண்டிய அவசியம் என்ன?
மொத்தம் உள்ள 16 ஆண்டுகளில் இரண்டு ஆண்டுகள் விடுபட்டுள்ளன. அப்படி வழங்கப்பட்ட 14 ஆண்டுகளில் 9 ஆண்டுகள் லாபம் வெறும் ரூ.300 கோடி மட்டுமே. 5 ஆண்டுகளில் நஷ்டம் ரூ.245 கோடி.
மொத்த மது கொள்முதல் ரூ. 1 லட்சத்து 70 ஆயிரத்து 240 கோடி (ரூ.1,70,240). மொத்த மது விற்பனை ரூ. 2 லட்சத்து 83 ஆயிரத்து 361 கோடி (ரூ.2,83,361). மொத்த செலவு ரூ.2 லட்சத்து 87 ஆயிரத்து 62 கோடி (ரூ.2,87,062). ஆனால் மொத்தம் லாபம் ரூபாய் ரூ.300 கோடி (0.03% மட்டுமே) என்பது அதிர்ச்சி அளிக்கிறது" என்கிறார்.
இதையும் படிங்க: மாணவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது - அன்பில் மகேஷ் அறிவுறுத்தல்