தமிழ்நாடு

tamil nadu

காந்தியின் கனவுகளை இன்றும் சுமக்கும் தே கல்லுப்பட்டி ஆசிரமம்

By

Published : Aug 15, 2021, 5:58 AM IST

Updated : Aug 15, 2021, 2:58 PM IST

தேசப்பிதா காந்தியடிகளின் நிர்மாணப் பணிகளை, கிராம மேம்பாட்டை இன்றளவும் செய்து வருகிறது தே.கல்லுப்பட்டி காந்தி நிகேதன் ஆசிரமம். இந்திய அளவில் மட்டுமன்றி, உலக அளவில் பல்வேறு தலைவர்களும், மக்கள் பணியாளர்களும் வியந்து பாராட்டிய கல்லுப்பட்டி ஆசிரமம், கடந்த 70 ஆண்டு கால வரலாற்றை இன்றும் சுமந்து கொண்டிருக்கிறது. அது குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பு.

T Kallupatti Ashram still carries Gandhi's dreams
Gandhi Niketan

மதுரை : மதுரையிலிருந்து சற்றேறக்குறைய 30 கி.மீ. தொலைவில் ராஜபாளையம், தென்காசி செல்லும் சாலையில் அமைந்துள்ளது தே.கல்லுப்பட்டி காந்தி நிகேதன் ஆசிரமம்.

தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் கனவுக்கு உருவம் கொடுக்கும் வகையில், அவரது நிர்மாணப் பணிகளுள் ஒன்றான கிராம மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்டு கடந்த 1940ஆம் ஆண்டு பழுத்த காந்தியவாதி கோ.வேங்கடாசலபதியால் உருவாக்கப்பட்டது இந்த ஆசிரமம்.

காந்தி நிகேதன் ஆசிரமம்
மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் கல்வி, பொருளாதாரம், சமூக வளர்ச்சியை அடிநாதமாகக் கொண்டு, அதில் சிறிதும் சமரசம் செய்யாமல் இயங்கி வருகிறது காந்தி நிகேதன் ஆசிரமம்.

காந்தி நிகேதன் பள்ளி

காந்தி நிகேதன் ஆசிரமத்தில் கடந்த 1946ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட முதல் ஆதாரப்பள்ளி தொடங்கி சற்றேறக்குறைய லட்சம் மாணவ, மாணவியர் இங்கிருந்து கல்வி பயின்று சென்றுள்ளனர். வெறுமனே கல்விப் பணி மட்டுமன்றி இந்த ஒன்றியத்தின் சமூக, பொருளாதார மேம்பாட்டுப் பணிகளிலும் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகிறது.

முனைவர் ரகுபதி பேட்டி
இதுகுறித்து ஆசிரமத்தின் நிர்வாகக்குழு உறுப்பினரும், காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகப் பேராசிரியருமான முனைவர் ரகுபதி கூறுகையில், “என்னுடைய பெயரால் நிர்மாணப் பணிகள் நடைபெறும் காந்தி நிகேதன் ஆசிரமத்திற்கு எனது ஆசிகள் உண்டு என்று காந்தியடிகளால் கல்லுப்பட்டி காந்தி நிகேதன் ஆசிரமம் ஆசீர்வதிக்கப்பட்ட பெருமை படைத்தது.

காந்தி மண்டபம்

அவர் அளித்த ஆன்ம பலத்தின் காரணமாக கடந்த 81 ஆண்டுகளாக ஆசிரமம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விடுதலைப் போராட்ட வீரர்களின் முகாமாகத் தொடங்கப்பட்ட இந்த ஆசிரமம், 1944-இல் நிர்மாணப்பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களை தயார் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இயங்கத் தொடங்கியது.

இதற்காக இதன் நிறுவனர் கோ.வேங்கடாசலபதியை அழைத்து சேவா கிராமத்தில் பயிற்சி அளித்தார்” என்கிறார். முனைவர் ஆசிரம பள்ளியிலேயே படித்து வளர்ந்தவர்.
புதிய கல்வி திட்டம்
நாடு விடுதலையடைந்த பின்னர் புதிய கல்வி முறைக்கு இந்தியா மாற வேண்டும் என்பமை காந்தியடிகள் வலியுறுத்தினார். இதற்காக மெக்காலே கல்வி முறையை மாற்றி, வாழ்க்கைக்கான கல்வியை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற காந்தியடிகள் எண்ணத்தின்பால், இங்கு ஆதாரக் கல்வி தொடங்கப்பட்டது.

சுயவேலைவாய்ப்பு பயிற்சி

பள்ளி வகுப்பறை மட்டுமன்றி, விவசாய நிலங்கள், தொழிற்கூடங்களிலும் தங்களுக்கான கல்வியை மாணவர்கள் கற்க வேண்டும் என்பது இந்தக் கல்வி முறையின் நோக்கம். காந்தி நிகேதனில் ஆரம்பப்பள்ளி கடந்த 1946-ஆம் ஆண்டும், உயர் ஆதாரப்பள்ளி 1954-ஆம் ஆண்டும் இங்கே தொடங்கப்பட்டன. பிற பள்ளிகளிலிருந்து மிக வித்தியாசமாக இவ்விரண்டு பள்ளிகளும் இயங்கி வந்தன.
முனைவர் கீதா பேட்டி
ஆசிரமத்தின் செயலாளர் முனைவர் கீதா கூறுகையில், “காந்தியடிகளின் ஆதாரக் கல்விக் கொள்கையை சிறப்புடன் நடைமுறைப்படுத்தி வருகிறதுஎன என்சிஇஆர்டி என்ற நிறுவனம் கடந்த 2005-ஆம் ஆண்டு தேசிய பாரம்பரிய பள்ளிகளுள் ஒன்றாக அறிவித்தது. இந்தியாவிலுள்ள ஆறு பள்ளிகளுள் இதுவும் ஒன்றாகும்.

மாணவர்களுக்கு தோட்ட பயிற்சி

தற்போதுள்ள ஆதாரப்பள்ளியில் 540 குழந்தைகளும், மேல்நிலைப்பள்ளியில் 1180 மாணவ, மாணவியரும் பயில்கின்றனர். வழக்கான கல்வியுடன் காந்தியடிகளின் ஆதாரக் கல்வியை மையமாகக் கொண்டு உடல் உழைப்பு, பிரார்த்தனை, சுற்றுப்புறத் தூய்மை, தொழிற்கல்வி, தேசபக்தி கல்வி, சமூகப்பணி, கிராமிய சேவைகள் ஆகியவற்றைப் போதிப்பது இப்பள்ளியின் முக்கிய நோக்கமாகும்” என்கிறார்.

கேசி குமரப்பாவின் கடைசிக் காலம்
தற்சார்பு பொருளாதாரத்தின் தந்தை என்று போற்றப்படுகின்ற அறிஞர் ஜே.சி.குமரப்பா, கல்லுப்பட்டி காந்தி நிகேதன் ஆசிரமத்தில்தான் தனது இறுதிக் காலங்களைக் கழித்தார். காந்திய பொருளாதாரத்தை வளர்த்தெடுக்க பல்வேறு வகையிலும் முயன்றவர். சென்னையில் இறந்து எரியூட்டப்பட்ட ஜே.சி.குமரப்பாவின் அஸ்திக் கலசம் இங்கும் வைக்கப்பட்டுள்ளது.

குமரப்பா அஸ்தி வைத்த இடம்

அவர் வாழ்ந்த வீட்டை நினைவில்லமாக ஆசிரமத்தார் பராமரித்து வருகின்றனர். ஆசிரமத்தின் நிறுவனர் கோ.வெங்கடாசலபதியின் கல்லறையும் இங்குள்ளது. மேலும் இந்த ஆசிரமத்தின் பணிகளைப் பார்வையிடுவதற்காக தமிழக முன்னாள் முதலமைச்சர்கள் ராஜாஜி, ஓ.பி.ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா, பக்தவச்சலம், காமராஜர் முன்னாள் குடியரசுத் தலைவர்கள் இராஜேந்திர பிரசாத், அப்துல் கலாம், தேசியத் தலைவர்கள் ஜெயபிரகாஷ் நாராயணன், தக்கர் பாபா, கருப்பின காந்தி என்றழைக்கப்பட்ட மார்ட்டின் லூதர் கிங் உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.
ஆசிரமத்தின் தனிச்சிறப்பு
ஆசிரமத்தின் முன்னாள் மாணவரும் நீரியல் ஆய்வாளருமான முனைவர் சீனிவாசன் கூறுகையில், “கல்லுப்பட்டி அருகேயுள்ள சத்திரப்பட்டி என்னுடைய ஊரில் 6ஆம் வகுப்பிலிருந்து 12-ஆம் வகுப்புரை வரை பயின்றேன். அப்பகுதியில் இயங்கிய கல்வி நிறுவனங்களில் தனிச்சிறப்பு வாய்ந்தது.

காந்தியின் கனவுகளை இன்றும் சுமக்கும் தே கல்லுப்பட்டி ஆசிரமம்

அங்கு என்னோடு பயின்ற மாணவ, மாணவியர் அனைவரும் மிகச் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர். சராசரி பள்ளி ஆசிரியர்களைவிட அறிவிலும் திறமையிலும் சமூக அக்கறையிலும் மேம்பட்டவர்களாக ஆசிரம பள்ளி ஆசிரியர்கள் இருப்பர். காந்திய தத்துவத்தை முறைப்படி மாணவர்களுக்கு போதிக்கின்ற கல்வி நிறுவனமாக இன்றளவும் திகழ்கிறது” என்கிறார்.

காந்தியடிகள் வசிப்பிடம்
ஆசிரமத்திற்கு தேவையான பெரும்பாலான உணவுப் பொருள்கள் குறிப்பாக காய்கறி, உணவுப் பயிர், பால் பொருட்கள் அனைத்தும் ஆசிரம வளாகத்திலேயே உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

மேலும் பல்வேறு சுயதொழில்களும் இங்கு கற்றுத் தரப்படுகின்றன. தற்சார்புக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் கல்லுப்பட்டி காந்தி நிகேதன் ஆசிரமம், காந்தியடிகளின் கனவு இந்தியாவுக்கு இப்போதும் தூண்டுகோலாய் இருக்கிறது என்பது மிகைச் சொல் அல்ல!

Last Updated : Aug 15, 2021, 2:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details