மதுரை மாநகராட்சி 75, 76ஆவது வார்டுக்குள்பட்ட தேவாலயம் அருகே மாடக்குளம் செல்லும் சாலை உள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் இப்பகுதியில் புதிதாகச் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் சாலை அமைக்கப்பட்ட சில நாள்களிலேயே அந்தச் சாலை பழுதாகி கற்கள் பெயர்ந்து வெளியே வந்தது.
இது குறித்து மாநகராட்சி ஆணையரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அலுவலர்கள் பெயரளவிற்கு மட்டும் சாலை மேல் கான்கிரீட் கலவையைக் கொட்டிச் சென்றனர். இந்த நிலையில் இன்று காலை இந்தச் சாலையில் திடீரென சுமார் ஒரு அடி அகலம் இரண்டு அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இந்தப் பள்ளம் குறித்தும் மாநகராட்சி அலுவலர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.