மதுரை சூப்பர் சரவணா ஸ்டோரில் திடீர் தீ விபத்து… ஊழியர்கள் காயம்!! மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர் 9 மாடிகளைக் கொண்டது. இந்தக் கடையில் இன்று மாலை 4:30 மணியளவில் ஒன்பதாவது தளத்தில் உள்ள புட் கோர்ட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்தப்பகுதி முழுவதும் கடுமையான புகை வெளியேறிய நிலையில், அங்கிருந்த ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். அந்த நிலையில் அடுத்தடுத்த தளங்களுக்கும் புகை பரவியதால் வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த விபத்தில் ஒன்பதாவது ப்ளோரில் இருந்த 4 ஊழியர்கள் காயமடைந்து மயக்கம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர். ஒன்பதாவது தளத்தில் ஃபுட் கோர்ட் அதே போன்று அடுத்த தளத்தில் எளிதில் தீப்பற்றக்கூடிய எலக்ட்ரானிக் மரச் சாமான்கள், பிளாஸ்டிக் போன்றவைகள் இருப்பதால் புகை அதிகரித்துக் காணப்பட்டது. இதனால் உள்ளே ஊழியர்கள் புகை மூட்டத்தில் சிக்கி மயங்கிய நிலையில் இருந்தனர்.
இதனை அடுத்து தீ விபத்து சம்பவம் நடைபெற்ற பகுதியில் வந்து தீயை தீயணைப்புப்படைவீரர்கள் அணைத்தனர். இந்தச் சம்பவத்தை செய்தி சேகரிக்க சென்ற ஊடகத்தினர் மீது சரவணா ஸ்டோர் ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் தாக்குதல் நடத்தியதோடு ஒளிப்பதிவு செய்யவிடாமல், கேமரா உள்ளிட்டவர்களை உள்ளே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர்.
எந்தவித விபத்தும் இல்லை என பொய்யான தகவலைக் கூறி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் அளிக்காத நிலையில் தான், தீ அதிகமாக பரவத்தொடங்கியது. தொடர்ச்சியாக ஒன்பதாவது தளத்தில் இருந்த வாடிக்கையாளர்கள் தீ, கருகுவது போன்ற மணம் அடிப்பதாக கூறிய நிலையில் அங்கிருந்த ஊழியர்களும் கடைநிர்வாகத்தினரும் கண்டுகொள்ளாத நிலையில் தான் தீ விபத்தானது நடைபெற்றுள்ளது.
9 தளங்களிலும் இருந்த வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் வாடிக்கையாளர்களுடைய பொருட்கள், வாகனங்கள், கடைக்கு உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், நீண்ட நேரமாக அவர்கள் காத்திருக்கக்கூடிய நிலை காணப்படுகிறது. மதுரை மாட்டுத்தாவணி பகுதி முழுவதுமாக இந்த தீ விபத்து காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியாக சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர், வட்டாட்சியர் , கோட்டாட்சியர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு மேற்கொண்டுவருகிறார்கள். அந்தப் பகுதி முழுவதுமாக காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மதுரை சூப்பர் சரவணா ஸ்டோரில் ஏற்கனவே உரிய பாதுகாப்பு இல்லாமல், அவசர கோலத்தில் திறக்கப்பட்டதாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் இது போன்ற தீ விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியாக ஒன்பதாவது தளத்தில் ஊழியர்கள் யாரும் சிக்கியுள்ளனரா? என்பது குறித்து தீயணைப்புத்துறையினர் நேரில் சென்று தேடி வருகின்றனர்.
9ஆவது தளத்தில் இருந்து அடுத்தடுத்த தளங்களுக்கும் தீ பரவி வருகிறது. தொடர்ச்சியாக மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து தீயணைப்பு நிலையங்களிலிருந்தும் தீயணைப்பு வாகனங்கள் அழைத்துவரப்பட்டு தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ச்சியாக புகை அதிகரித்துக் காணப்பட்ட நிலையில் கடையின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, புகை வெளியேற்றப்பட்டு வருகிறது
புகை மட்டும் அதிகரித்து வரக்கூடிய நிலையில், மாநகராட்சி மற்றும் தனியார் குடிநீர் லாரிகள் மூலமாக தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீ அணைக்கப்பட்டு வருகிறது. சூப்பர் சரவணா ஸ்டோர் கடையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மாட்டுத்தாவணி முதல் புதூர் பகுதி வரையும் புகை மூட்டமாக காணப்பட்டது.
இதையும் படிங்க: மதுரையில் ரவுடி மீது துப்பாக்கி சூடு..மாட்டுத்தாவணியில் என்ன நடந்தது?