மதுரை:உக்ரைன் நாட்டில் மேற்படிப்புப் பயிலும் தமிழ்நாடு மாணவர்களின் பாதுகாப்பை வலியுறுத்தி இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு சு. வெங்கடேசன் எம்.பி., கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், "மதுரையில் இருந்து உக்ரைன் சென்று படிக்கிற மாணவர்கள் நிறைய இருக்கிறார்கள். தமிழ்நாடு அளவில் எனும்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும். அவர்களின் பெற்றோர்கள் பதற்றத்தோடு என்னைத் தொடர்பு கொண்டு வருகிறார்கள்.
உக்ரைனில் போர்ச்சூழல் நிலவுகிறது என்றும் குண்டு வெடிப்புகள் பல பகுதிகளில் நடந்தேறி வருகிறது என்றும் செய்திகள் வருகின்றன. ட்விட்டரில் உக்ரைனுக்கான இந்தியத்தூதர் விடுத்துள்ள இந்த செய்தி அங்குள்ள கடுமையான சூழலை உறுதி செய்கிறது. நிலைமை மிகப் பதற்றமாக உள்ளது. நிச்சயமற்றதாகவும் உள்ளது. இது பெரும் கவலைகளை உருவாக்கியுள்ளது. வான் வழி மூடப்பட்டுவிட்டது. ரயில் அட்டவணைகள் கடைபிடிக்கப்படவில்லை. சாலைகள் கடும் நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன.
இத்தகைய சூழலில் பல நாடுகள் தங்கள் நாட்டு மக்களைப் பாதுகாப்பாக திரும்ப கொண்டுவந்து சேர்க்க ஏற்பாடுகள் செய்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய வெளியுறவு அமைச்சகமும் உச்சபட்ச அளவிலான அரசு முறை தொடர்புகளின் மூலம் தமிழ் மாணவர்களின் பாதுகாப்பையும், அவர்களின் நாடு திரும்பலையும் உறுதிசெய்ய உடனடி முயற்சிகளை செய்ய வேண்டும்'' எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க:உக்ரைனில் சிக்கிய கொடைக்கானல் மாணவி வீடியோ வெளியீடு