கப்பல் உடைக்கும் மசோதா மீது இன்று மதுரை மக்களவைத் தொகுதி எம்.பி. சு. வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் பேசுகையில்,கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக பலி கொடுக்கிற இந்த ஆட்சியினுடைய பல மசோதாக்களின் தொடர்ச்சியே இந்த மசோதா. குறிப்பாக மேற்கு உலக நாடுகள் வளர்ந்த நாடுகளில் கப்பல் உடைக்கும் தொழில்களை பெரும்பாலும் அனுமதிப்பதில்லை. அதற்கு காரணம் அந்த நாட்டினுடைய சுற்றுச்சூழலைப்பற்றி அங்கே இருக்கிறவர்களுக்கு விழிப்புணர்வும் அதற்கேற்றார்போல் உள்ள சட்டங்களும்தான்.
ஆனால், இன்றைக்கு உலகத்தில் ஒரு வருடத்திற்கு ஏறக்குறைய 900 கப்பல்கள் உடைக்கப்படுகின்றன என்றால் அவற்றில் 70விழுக்காடு கப்பல்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தில் உடைக்கப்படுகின்றன. இது இந்தியாவின் கடல் வளத்தை மிகப்பெரிய அளவுக்கு மாசுப்படுத்துகிற ஒரு சூழலை உருவாக்குகிறது.
இந்தியாவில் உடைக்கப்படுகிற 90 விழுக்காடு கப்பல்கள் பிரதமர் மோடி அவர்களுடைய சொந்த ஊரான அலங்கில் உள்ள துறைமுகத்தில்தான் உடைக்கப்படுகிறது. இந்தியாவில் சுற்றுச்சூழலில் மிக மாசடைந்த நகரங்களின் பட்டியலில் அலங் மிக முக்கிய இடத்தில் இருக்கின்றது. தன்னுடைய சொந்த ஊரினுடைய சுற்றுசூழலையே சரிப்படுத்த முடியாத நிலையில் பிரதமர் மோடி இருக்கிறாரா என்ற கேள்வியை இங்கு எழுப்ப வேண்டியுள்ளது.
சுற்றுச்சூழல் குறித்து மிக மோசமான நிலையை இந்தியா சந்தித்து கொண்டு இருக்கிற நேரத்தில், இது போன்ற மசோதாக்களை நீங்கள் கொண்டு வருவது மிகுந்த அதிர்ச்சியை உருவாக்குகிறது. இந்த மசோதாவில், 15 நாட்களுக்குள் அனுமதி கேட்கிறவர்களுக்கு அரசு முறையான அனுமதி கொடுக்கவில்லை என்றால் அனுமதி கொடுத்துவிட்டதாக அர்த்தம் என எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. இது மிகவும் ஆபத்தானது.