மதுரை: தமிழ்நாட்டில் உள்ள ஒரே பெண்கள் கூடைப்பந்து பயிற்சி மையம் வாரணாசிக்கு மாற்றம் செய்யும் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு சு.வெங்கடேசன் எம்பி கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "பல்வகை விளையாட்டுகளுக்கான இந்திய விளையாட்டுத் துறை ஆணையத்தின் பயிற்சி மையங்கள் 37 நகரங்களில் உள்ளன. அதில் இரண்டு தமிழ்நாட்டில் உள்ளன .மயிலாடுதுறையில் உள்ள பயிற்சி மையம், கூடைப்பந்து மற்றும் கைப்பந்துக்கான அங்கீகாரம் பெற்று பயிற்சியை வழங்கி வருகிறது. இது பெண் கூடைப்பந்து வீரர்களுக்கான சிறப்பு மையம். பெண் விளையாட்டு வீரர்கள் அங்கு கூடைப்பந்து பயிற்சி பெற்று வருகின்றனர். இதற்காக அங்கு செல்பவர்கள் மயிலாடுதுறை பள்ளியிலேயே அனுமதி பெற்று பயின்றும் வருகிறார்கள்.
தற்போதைய இந்திய பெண்கள் கூடைப்பந்து அணியின் கேப்டன் புஷ்பா மற்றும் அணியில் உள்ள சத்யா ஆகியோர் இந்த மயிலாடுதுறை மையத்தில் பயிற்சி பெற்றவர்களே. ரயில்வேயில் விளையாட்டுக்கான இட ஒதுக்கீட்டில் பணி நியமனமும் பெற்றார்கள். இவர்கள் 2018-இல் இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுக்களிலும் பங்கேற்றவர்கள். புஷ்பா நாகப்பட்டினம் மாவட்டத்தின் சிறிய கிராமமான முடிகண்ட நல்லூரில் இருந்து மயிலாடுதுறை மையத்தில் பயிற்சி பெற்றவர்.
இப்படிப்பட்ட மயிலாடுதுறை மையத்தில் கூடைப்பந்து, கைப்பந்து பயிற்சி பெறுவதற்கு தற்போது ஆபத்து எழுந்துள்ளது. இந்திய விளையாட்டு ஆணையம் (Sports Authority of India) வெளியிட்டுள்ள சுற்றறிக்கை எண் 518/SAI/ OPS/STC review/2022 -23/ 05.04.2023, மயிலாடுதுறையில் உள்ள கூடைப்பந்து, கைப்பந்துக்கான பயிற்சி அங்கீகாரத்தை ரத்து செய்து வேறு மையங்களுக்கு மாற்ற பரிந்துரைத்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள இன்னொரு பயிற்சி மையமான சேலத்தில் கூடைப்பந்துக்கான அங்கீகாரம் இருந்தாலும் அங்கு பெண்களுக்கான இடங்கள் தரப்படவில்லை. கைப்பந்து பயிற்சிக்கு தமிழ்நாட்டில் வேறு பயிற்சி மையமே இல்லை. அப்படியெனில் பெண் கூடைப்பந்து வீரர்கள், பயிற்சிக்கு எங்கு செல்வார்கள்?