மதுரை:ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி குறித்து இன்று செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “நாடாளுமன்றத்தில் நான் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தோல்வி அடைவது பற்றிய கேள்வி ( நட்சத்திர கேள்வி 31/ 08.12.2022) ஒன்றை எழுப்பி இருந்தேன்.
கேள்வி:புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் 90விழுக்காட்டிலிருந்து 95 விழுக்காடு வரை தோல்வி அடைவதாக வந்துள்ள செய்திகள் அரசின் கவனத்திற்கு வந்துள்ளனவா? அப்படியெனில் தோல்வி விழுக்காடு குறு சிறு தொழில்களில் எவ்வளவு? அரசின் கணக்குகளில் மேற்கூறிய ஊடக ஆய்வுகளுடன் ஒத்துப் போகிறதா? இல்லையெனில் அரசின் கணக்குப்படி தோல்வி விழுக்காடு எவ்வளவு? என்று கேள்விகளை எழுப்பி இருந்தேன்.
மத்திய அமைச்சர் நாராயண் ரானே பதில்:1961 நடவடிக்கை ஒதுக்கீடு விதிகளின்படி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், தொழில் மற்றும் வணிக அமைச்சகத்தின் தொழில் மற்றும் உள்வர்த்தக வளர்ச்சித் துறையின் (DPIIT) கீழ் வருகிறது. அத்துறை தந்த தகவல்களின்படி இந்திய அரசு ஸ்டார்ட் அப் முன்முயற்சி குறித்து விரிவான அணுகுமுறையை வகுத்துள்ளது. இதனால் தேசத்தின் ஸ்டார்ட் அப் சூழல் முறைமை முதிர்ச்சி அடைந்து உலகின் மூன்றாவது பெரும் ஸ்டார்ட் அப் சூழல் முறைமையாக வளர்ந்துள்ளது.
640 மாவட்டங்களில் 84ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 45 விழுக்காடு நிறுவனங்கள் இரண்டாம், மூன்றாம் தட்டு நகரங்களில் உள்ளன. அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 8.4 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. 100 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சுமார் 8ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள "யூனிகார்ன்" அந்தஸ்தை பெற்றுள்ளன.
வழமையான வணிகங்களின் வெற்றி, தோல்வி குறிப்பிட்ட ஆண்டுகளின் செயல்பாடு அடிப்படையில் தீர்மானிக்கப்படும் போது ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வெற்றி தோல்வி துல்லியமாக ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் மதிப்பிடப்படுவதாக உள்ளது. எல்லா வகை புதிய நிறுவனங்களையும் ஒட்டு மொத்த மதிப்பீட்டுக்குள் கொண்டு வருவது கடினம்.