தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தங்க முட்டையிடும் வாத்தை வளர்க்கத் தெரியவில்லை' - எல்ஐசி பங்கு விற்பனை குறித்து சு. வெங்கடேசன் எம்.பி கண்டனம் - ஒன்றிய அரசுக்கு சு வெங்கடேசன் எம்பி கண்டனம்

எல்ஐசி கொடுப்பதாக சொன்ன கடன் தொகையை அரசு பயன்படுத்தவில்லை. ஆனால் எல்ஐசியை விற்பதற்கு ஒன்றிய அரசு விடாமல்  முயற்சிக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எல்ஐசி பங்கு விற்பனை
எல்ஐசி பங்கு விற்பனை

By

Published : Feb 12, 2022, 7:30 AM IST

மதுரை: மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நேற்று (பிப்.11) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, "எல்ஐசிக்கும் இந்திய ரயில்வேக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் 12.03.2015 அன்று கையெழுத்தானது. அதன்படி எல்ஐசி இந்திய ரயில்வே நிதிக் கழகத்திற்கு ரூ. 1,50,000 கோடி கடன் பத்திரங்கள் வாயிலாக தரப்படும். ஒவ்வோர் ஆண்டும் ரூ. 30,000 கோடி என்ற முறையில் இந்த கடன் வழங்கப்படும்.

இந்த தொகை ரயில்வே கட்டமைப்புகளுக்கு வழங்கப்படும். ஐந்து ஆண்டுகளுக்கு கடன், கடன் வட்டியைத் திரும்பிச் செலுத்த வேண்டியதில்லை என்றும் தவணை நீட்டிப்பு (Moratorium) தரப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.

அந்நிய முதலீடுகள், தனியார் முதலீடுகள் அதிகமாக அனுமதிக்கப்படுவது ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கான நிதியை கொண்டு வரும் என்று பேசிய ஆட்சியாளர்கள் உள்நாட்டு சேமிப்புகளே உறுதியான ஜீவ ஊற்று என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டி இருந்ததன் வெளிப்பாடே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம்.

இந்தியாவில் தங்க முட்டையிடும் ஒரு நிறுவனமாக எல்ஐசி இருந்ததால் இது சாத்தியம் ஆயிற்று. ஒன்றரை லட்சம் கோடி பெரிய தொகை என்பதால் ஊடகங்களின் முக்கிய செய்தியாக மாறியது. அப்போதைய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு விரைவில் திட்டங்கள் அமலாகும், நிறைய ரயில்கள் ஓடும், ரயில்வே பயணங்கள் அதிகரிக்கும், இதனால் பொருளாதாரம் செழிக்கும் என்றெல்லாம் உற்சாக வசனங்களை பேசினார். ஐந்து ஆண்டுகளும் ஓடி விட்டன. என்னதான் ஆயிற்று அந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று தெரிந்து கொள்ள நாடாளுமன்றத்தில் கேள்வியை (எண் 1238) ஐ எழுப்பினேன். அதற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்துள்ளார்.

பதில்தான் அதிர்ச்சி தருகிறது. ஐந்தாண்டுகளில் எவ்வளவு எல்ஐசி கடன் உதவி பெறப்பட்டுள்ளது என்று அமைச்சர் பதில் தந்துள்ளார்.

கோடி ரூபாய்களில்

2016 - 7000
2017 - 3000
2018 - 6200
2019 - 0
2020 - 4300
மொத்தம் - ரூ. 20,500 கோடி

ஐந்தாண்டு புரிந்துணர்வு காலமும் முடிந்து விட்டது. ஒன்றரை லட்சம் கோடி என்று ஒப்பந்தம் போட்டும் ரூ. 20,500 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது இரண்டாம் ரயில் பாதைக்கும் (Doubling), மின்சார மயத்திற்கும் (Electrification) பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஐந்தாண்டுகளில் இந்திய ரயில்வே நிதிக் கழகம் பெற்ற கடன் ரூ. 1,01,234 கோடி தான். அதில் எல்ஐசி தந்தது மட்டும் 20 சதவீதம். யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்பது போல.

நம்முடைய கேள்வி என்னவெனில்..

1. எல்ஐசியோ வலிமையான நிதி நிறுவனம். அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரூ. 1,50,000 கோடி பெற்று இருக்க முடியும். சுரேஷ் பிரபு அன்று சொன்னது போல கட்டமைப்புகளை மேலும் மேலும் வலுப்படுத்தி இருக்க முடியும்? அரசாங்கம் ஏன் செய்யவில்லை?

2. ஒரு கட்டத்தில் நிதி எங்கே? திட்டங்கள் எங்கே ? என்று எல்ஐசி கேட்டதாக கூட செய்திகள் வந்தன. அப்படி ஏதும் திட்டங்கள் உருவாவதில் தாமதமா?

3.இதைவிட அதிர்ச்சி என்னவெனில், இந்திய ரயில்வே நிதிக் கழகம் திரட்டியுள்ள நிதி மொத்தமே ரூ. 1,01,234 கோடி தான். எல்ஐசியிடம் இருந்து எதிர்பார்க்கப்பட்ட தொகையைக் கூட மொத்த நிதி திரட்டல் எட்டவில்லையே?

என்ன திட்டமிடல்? பெரிதாக அரசு அறிவிக்கிற தொகைகளை, திட்டங்களை எப்படி நம்புவது?

தங்க முட்டையிடும் வாத்தை வளர்க்கத் தெரியவில்லையே. இவ்வளவு அரசின் திட்டங்களுக்கு துணை நிற்கும் ஒரு நிறுவனத்தை பங்கு விற்பனைக்கு ஆளாக்குவது என்ன நியாயம்? "என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பட்ஜெட் கூட்டத்தொடர்: ராஷ்டிரிய ஆரோக்கிய நிதி குறித்து கலாநிதி வீராசாமி பேச்சு

ABOUT THE AUTHOR

...view details