கேரளாவில் கூலி வேலை செய்துவந்த முஸ்தபா எனும் மதுரையைச் சேர்ந்த நபர், இரண்டு வாரங்களுக்கு முன்பு வீடு திரும்பியுள்ளார். காய்ச்சல் காரணமாக முடங்கியிருந்த அவருக்கு கரோனா என அக்கம்பக்கத்தினரால் வதந்தி பரவியது. காவல் துறைக்கும் சிலர் தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து காவல் துறையினர் அவர் இல்லத்துக்கு விரைந்துள்ளனர். அங்கிருந்து அவரையும் அவரது தாயாரையும் வாகனம் மூலம் ராசாசி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு முஸ்தபாவை பரிசோதித்த மருத்துர்கள், அவருக்கு கரோனா தொற்று இல்லை என உறுதி செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
முஸ்தபா அழைத்துச் செல்லப்பட்டதை வீடியோ எடுத்த சிலர், அதை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் முஸ்தபா இங்கு தங்கினால் தங்களுக்கும் கரோனா தொற்று வரும் என அவரது குடும்பத்தினரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அடுத்த நாள் அதிகாலை முஸ்தபாவை குப்பை லாரியில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன அழுத்தத்துக்கு ஆளான முஸ்தபா, சரக்கு ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது பேஸ்புக் பக்கத்தில்," மன அழுத்தம் அதிகரிக்கும் காலமிது. இந்தத் தவிர்க்க முடியாத முடக்கத்தில். நம்மை சுயசிந்தனையோடு உருவாக்காத கல்விமுறை, பக்கவாட்டுச் சமூகத்தை பார்க்கவிடாமல் ஓட வைத்த பாடப்புத்தகங்கள், ஒட்டி வாழக்கற்றுக் கொடுக்காத துரித வாழ்வு, பொருளாதாரப் பின்புலத்தைக் கொண்டே மனிதர்களை எடைபோடும் புத்தி, ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் இலக்கியங்களைக் காட்டாத மதிப்பெண் இலக்கணங்கள் என எல்லாமும் சேர்ந்து இப்படி ஒரு சவால் வரும்போது திடத்துடன் சந்திக்கும் மனவலிமையை நமக்குத் தரவில்லை.
“என்ன ஆனாலும் நாங்க இருக்கோம்டா ஒங்கூட” என்ற சொல் எவ்வளவு வலிமைவாய்ந்தது. அந்த ஒற்றைச் சொல் எந்த மனிதனிடமும் கிடைக்காததால்தானே பத்து கிலோமீட்டர் நடந்தே போய் சரக்கு ரயிலிலே பாய்ந்து மாய்ந்திருக்கிறார் முஸ்தபா.