மதுரை: மதுரை நெல்பேட்டையைச் சேர்ந்த மஞ்சுளா தனியார் நிறுவனத்தில் கூலி வேலை பார்க்கிறார். மாநகராட்சிப் பள்ளியில் காலை 8 மணிக்கு சுறுசுறுப்பாக குழந்தைகளுக்கு காலை உணவை பரிமாறிக் கொண்டிருந்தார் மஞ்சுளா. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் தொடங்கி வைத்த காலை உணவுத் திட்டத்தின் தன்னார்வ பணியாளராக அவதாரமெடுத்திருக்கிறார் மஞ்சுளா. இவரது குழந்தையும் இதே பள்ளியில் தான் இருப்பதால் மஞ்சுளாவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
கூலித் தொழிலாளியான தானும் செக்யூரிட்டி வேலைபார்க்கும் தனது கணவரும் அதிகாலையில் வேலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளோம் என கூறும் மஞ்சுளா, குழந்தைக்கு ஆரோக்கியமான உணவை வழங்க வேண்டுமே என்ற பதற்றத்தை காலை உணவுத் திட்டம் குறைத்துள்ளதாக கூறுகிறார். குடும்ப சுமையை தாங்குவதில் கூடுதலாக ஒரு கரம் இணைந்துள்ளதால், இத்திட்டத்திற்காக மாதத்தில் சில நாட்கள் தன்னார்வலராக பணியாற்றுவதை பெருமையாக கருதுகிறார் இவர்.
வாகனத்தில் வந்திறங்கிய உணவை புகைப்படம் எடுப்பது, உணவு வந்து சேர்ந்த நேரத்தை இதற்கான பிரத்யேக ஸ்மார்ட் போன் செயலியில் பதிவு செய்வது உள்ளிட்ட பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை என்பதால் அன்றைய உணவில் சேமியா கிச்சடியுடன், புரதம் மிக்க பட்டாணி, பருப்பு உள்ளிட்டவையும் மெனுவில் இருந்தன.
தமிழக அரசின் "இல்லம் தேடி கல்வி", "பள்ளி மேலாண்மை குழு " உள்ளிட்ட திட்டங்களின் பொறுப்பாளர்கள் காலை உணவுத் திட்டத்திற்கும் பொறுப்பேற்றுக் கொள்கின்றனர். இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலரான கிருஷ்ணகுமாரி, உணவு பரிமாறும் போதும், உணவு வேளை முடிந்த பின்னரும் செயலிமூலம் புகைப்படம் எடுத்து அப்டேட் செய்வதாக கூறுகிறார்.
நெல்பேட்டையைச் சேர்ந்த ஆரிஃபா கூறுகையில், வழக்கமாக வீட்டில் காலை உணவு சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தை கூட நண்பர்களுடன் சேர்ந்து உணவருந்துவதாலும், தினசரி ஒவ்வொரு வகையான உணவு கிடைப்பதாலும் ஆர்வத்துடன் குழந்தைகள் சாப்பிடுவதாக கூறுகிறார்.
வழக்கமாக காலையில் பள்ளிக்கு குழந்தைகள் தாமதமாக வருவது தற்போது முற்றிலும் குறைந்துள்ளதாக கூறுகிறார் மானகிரி மாநகராட்சி பள்ளியின் தலைமையாசிரியரான தேன்மொழி. காலை 7.30 மணிக்கே பள்ளிகளை வந்தடையும் குழந்தைகள் வழிபாட்டு கூட்டங்களிலும் தவறாது பங்கேற்கின்றனர்.
மதுரையைப் பொறுத்தவரையிலும் பொதுவான உணவுக்கூடங்களில் தயாராகும் உணவு வகைகள் அங்கிருந்து மாநகராட்சிக்குட்பட்ட 26 பள்ளிகளுக்கு பிரித்த அனுப்பப்படுகின்றன. இதே போன்று தமிழகம் முழுவதும் முழுக்க முழுக்க மாநில அரசின் நிதியிலிருந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.