மதுரை தல்லாகுளத்திலுள்ள காவலர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா (19) வசித்துவந்தார். இவரது தந்தை முருக சுந்தரம் காவல் சார்பு ஆய்வாளராக பணியாற்றிவருகிறார். மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா நீட் தேர்வுக்கு தயாராகிவந்த நிலையில், தேர்வு அச்சத்தால் இன்று (செப். 12) அதிகாலை வீட்டு மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
உயிரிழப்பதற்கு முன்னதாக மாணவி கடிதம் ஒன்றை எழுதினார். அதில், பெற்றோர் மற்றும் உறவினர்கள் தனக்காக அளித்த பங்களிப்புகள் பற்றி குறிப்பிட்டுள்ளார். அதில் இறுதியாக...’என்னை மன்னித்துவிடுங்கள். நான் மிகவும் சோர்ந்துவிட்டேன்’ எனக் குறிப்பிட்டிருந்தது மாணவியின் உடைந்த உள்ளத்தை நமக்கு பட்டவர்த்தனமாகக் காட்டுகிறது.
மாணவி ஜோதி கடந்த ஆண்டு 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று பின் நீட் தேர்வு எழுதிய நிலையில் மதிப்பெண் குறைந்ததால் தனியார் நீட் பயிற்சி மையத்தில் இந்த ஆண்டிற்கான தேர்வு எழுதுவதற்காக படித்துவந்தார். நாளை (செப்டம்பர் 12) நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் தேர்வுக்காக படித்துகொண்டிருந்த மாணவி துர்கா தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, மாணவியின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது.