தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிலை உடைப்பு விவகாரத்தை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் - திருமாவளவன் - காஷ்மீர் விவகாரம்

மதுரை: காஷ்மீர் விவகாரம் மற்றும் அம்பேத்கர் சிலை உடைப்பு போன்றவற்றை கண்டித்து போராட்டம் நடத்தவுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்திக்கும் திருமாவளவன்

By

Published : Aug 28, 2019, 3:58 PM IST

மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், காஷ்மீர் விவகாரம் மற்றும் அம்பேத்கர் சிலை உடைப்பு போன்ற விஷயங்களை கண்டிக்கும் வகையில், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி செப்டம்பர் மாதம் போராட்ட தேதி அறிவிக்கப்படும் என்றார்.

இந்திய பொருளாதாரம் மிக கடுமையான வீழ்ச்சியை சந்தித்துக்கொண்டிருப்பதாகவும், ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு போன்ற பல்வேறு நடவடிக்கையின் காரணமாக இந்த பேரிழப்பை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு

நாட்டில் பெரிய நிறுவனங்கள் அனைத்தும் தற்போது மூடப்பட்டு பல லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றார். பொதுத்துறை நிறுவனங்களை அம்பானி, அதானி போன்ற தனியார் கார்ப்பரேட் குழுமங்களுக்கு தாரை வார்ப்பது ஒன்றையே தனது பொருளாதார கொள்கையாகக் கொண்டு மோடி அரசு செயல்பட்டுக்கொண்டிருப்பதாகவும் காட்டமாக தெரிவித்தார்.

மோடி அரசின் பொருளாதார தோல்வியை கண்டித்து ஆங்கில ஊடகங்களுக்கு பேட்டி அளித்ததன் காரணமாகத்தான் ப. சிதம்பரம் பழிவாங்கும் நோக்கில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய திருமாவளவன், அம்பேத்கரின் சிலையை உடைத்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பதே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோரிக்கை என்றும் இது குறித்து எந்த தனி நபரையோ, அமைப்புகளையோ தாங்கள் குறை கூறவிரும்பவில்லை எனவும் தெளிவுபடுத்தினார். தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் அம்பேத்கரை இழிவுபடுத்தும் செயல்பாடுகள் நடைபெறுவதில்லை என்று குறிப்பிட்ட அவர், இங்குள்ள சாதிய மதவாதிகள் தான் தேவையற்ற குழப்பத்தை உருவாக்கி வருகின்றனர் என்றார்.

ABOUT THE AUTHOR

...view details