தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்டூடன்ஸ் டூ தொழில்முனைவோர்: கரோனா பெருந்தொற்று காட்டிய வாழ்க்கை பாதை! - கரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை

கரோனா பெருந்தொற்று ஊரடங்கு பலரின் வாழ்க்கை பாதையை மாற்றியிருக்கிறது. அலுவலகம் சென்று வேலை பார்த்த நிலைமாறி வீட்டில் இருந்த படியே வேலை பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சிலருக்கு அவநம்பிக்கையையும், சிலருக்கு நம்பிக்கையையும் அளித்துள்ள இந்த ஊரடங்கு, மதுரையிலுள்ள சில பட்டதாரி இளைஞர்களுக்கு வாழ்க்கைக்கான அடுத்த படிக்கு வழிகாட்டியுள்ளது.

ஸ்டூடன்ஸ்  டூ  தொழில்முனைவோர்
ஸ்டூடன்ஸ் டூ தொழில்முனைவோர்

By

Published : Aug 23, 2021, 7:54 PM IST

மதுரை: உள்ளடங்கிய சாலையின் மரநிழலில் தார்பாய் மீது பச்சைக் காய்கறிகள் பரப்பி வைக்கப்பட்டிருக்கும் அந்த சாலையோர கடை கொஞ்சம் வித்தியாசமாக கவனம் ஈர்க்கிறது. வழக்கான காய்கறிக்கடை தான் என்றாலும் அதில் அமர்ந்து வியாபாரம் செய்து கொண்டிருப்பவர்கள் பட்டதாரி இளைஞர்கள்.

இன்றைய டிஜிட்டல் யுக இளைஞர்களிடம் இயற்கை முறையிலான விவசாயம் மீது காதல் அதிகரித்துள்ளது. தொழில்நுட்ப பூங்காகளில் வேலை பார்த்து வந்த பல இளைஞர்கள் அங்கு வேலையைத் துறந்து விவசாயம் பார்க்க திரும்பி இருப்பதே இதற்கு சாட்சி.

இந்த காதலில் இருந்து கொஞ்சம் மாறியிருக்கிறது மதுரை நாகமலை புதுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்களான சுபாஷ், முத்துமணி, இசாக் அகமது, அருண்குமார் ஆகியோரது முயற்சி. இயற்கை முறையிலான விவசாயத்தை நேசிக்கும் இவர்கள், விவசாயிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்குமான பாலமாக மாறியிருக்கிறார்கள். இளைஞர்களின் இந்த புதிய பரிமாணத்திற்கு காரணமாகியிருக்கிறது பெருந்தொற்று ஊரடங்கு.

"விவசாயிகளோட உற்பத்தி பொருள்கள் பல நேரங்கள்ல வீணாகும் நிலைதான் இங்கே இருக்கு. அதை மாத்தணும்னு யோசிச்ச நாங்க இந்த முயற்சியை செய்திருக்கோம். பொருள்களை நேரடியா விவசாயிகளிடமிருந்து வாங்கி, நியாயமான விலைல மக்களுக்கு தர்றோம்" என்கிறார் அருண்குமார். இவர் எம்.காம். (சி.ஏ.,) பட்டதாரி.

விவசாயிகள் டூ வாடிக்கையாளர்கள்

தரமான பொருள்கள் நியாமான விலையில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகளிடமிருந்து காய்கறிகளை நேரடியாக கொள்முதல் செய்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

"நஞ்சில்லாத, பசுமையான காய்கனிகளை மக்களிடம் கொண்டு சேர்க்கணும்னு நானும் என் நண்பர்களும் சேர்ந்து இந்த மீனாட்சி பசுங்கனிஅங்காடியை ஆரம்பிச்சுருக்கோம். திரைத்துறையில் சாதிக்கணுங்கிறது என்னோட ஆசை. அந்த தேடலோட இந்த வேலையையும் செய்றேன்" என்கிற சுபாஷ் ஒரு கணினி மென்பொருள் பட்டதாரி.

தக்காளி, உருளைக்கிழங்கு, சிறிய, பெரிய வெங்காயம், முட்டை கோஸ், முருங்கைக்காய், கறிவேப்பிலை, கொத்துமல்லி, பச்சை மிளகாய் போன்ற காய்கறிகளுடன் அந்தந்த பருவங்களில் விளையும் பழங்களையும் இளைஞர்கள் விற்பனை செய்து வருகின்றனர். இதற்காக அதிகாலை நான்கு மணிக்கு வாடகை வண்டியில் கிளம்பி இருப்பு இருக்கும் விவசாயிகளிடமிருந்து நேரடியாக பொருட்களை வாங்கி விற்பனை செய்கின்றனர்.

ஸ்டூடன்ஸ் டூ தொழில்முனைவோர்

அனைவருக்கும் தரமான காய்கறிகள்

பெருந்தொற்று ஊரடங்கில் காய்கறி கிடைப்பதற்கு மக்கள் மிகவும் சிரமப்பட்டதைப் பார்த்தும், விற்பனைக்கு வந்த காய்கறிகள் அதிகவிலையில் இருந்ததைப்பார்த்த இளைஞர்களுக்கு இந்த எண்ணம் உதித்துள்ளது.

"ஊரடங்கின் போது காய்கறி விலை ரொம்ப அதிகமா இருந்துச்சு. அப்போதான் இந்த யோசனை எங்களுக்கு தோணுச்சு. எங்களோட இந்த முயற்சிக்கு திருமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி அன்னவயல் காளிமுத்து அண்ணன் ரொம்ப உதவியா இருந்தார், இருக்கிறார். அவரோட உதவியால தரமான காய்கறிகளை மக்களுக்குத் தர்றோம்" என்கிறார் வியாபாரிகளில் ஒருவரான முத்துக்கனி.

காய்கறிகளை கொல்முதல் செய்ததும் அன்றைய காய்கறிகள் குறித்து தங்களது வாடிக்கையாளர்களுக்கு அலைபேசி வழியாக தகவல் தெரிவிக்கின்றனர் அவர்களின் தேவைகளைக் குறித்துக் கொண்டு, வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே சென்று காய்கறிகளை விநியோகம் செய்கின்றனர். இதற்காக கட்டணம் ஏதும் வசூல் செய்வதில்லை.

காய்கறி வியாபாரத்திற்கு முன்பு இளைஞர்கள் தமிழ் வனம் என்ற அமைப்பின் மூலமாக மரக்கன்றுகள் நடும் பணியினை செய்து வந்துள்ளனர். நாகமலை புதுக்கோட்டையில் இருந்து ஆண்டிப்பட்டி வரையிலான சாலையோரங்களில் மரம் நடும் பணியைச் செய்துவரும் இளைஞர்கள் அப்பணியினை கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து செய்து வருகின்றனர்.

"மரம் நடும் பணியுடன் மக்களுக்கு நேரடியாக பயன்படும் வகையில் செயல்பட வேண்டும் என்று இந்தக் காய்கறி விற்பனையைத் தொடங்கியுள்ளோம். படித்து விட்டு சும்மா இருப்பதை விட இந்த வேலைகள் மனநிறைவைத் தருகின்றன" என்கிறார் இசாக் அகமது.

காய்கறிகளுடன் சத்தான கீரைகளையும் விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன், அதற்கான ஆயத்தப் பணிகளிலும் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். கீரையையும் குறைந்த விலையில் வழங்க வேண்டும் என்பகற்காக, கீரைப் பயிரிட மேலக்குடி அருகே அரை ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ளனர்.

எண்ணம் சிறப்பாக இருக்கும் போது அந்த எண்ணமே நம் எதிர்காலத்திற்கு வழிகாட்டும் என்பதற்கு இந்த இளைஞர்களே எடுத்துக்காட்டு.

இதையும் படிங்க:நம்பிக்கை அதுதானே எல்லாம்: 70% நுரையீரல் தொற்றிலிருந்து மீண்ட முதியவர்!

ABOUT THE AUTHOR

...view details