இந்திய ரயில்வேயில் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி வரை உள்ள கணக்குப்படி ரயில் பாதையில் இதுவரை ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 390 பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வேயின் புள்ளி விவரம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய ரயில்வே அண்மையில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, "இந்திய ரயில்வேயில் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி கணக்குப்படி ரயில்பாதையில் இதுவரை ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 390 பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக சாலைப் போக்குவரத்தை எளிதாக்க மூன்றாயிரத்து 449 சாலை மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ரயில் நிலையங்களில் மூன்றாயிரத்து 771 நடை மேம்பாலங்கள் உள்ளன. இந்தப் பாலங்களின் பாதுகாப்பு, உறுதித்தன்மை ஆகியவற்றைக் கண்காணிக்க பொறியாளர்கள், அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வுமேற்கொள்கிறார்கள். இந்தக் கண்காணிப்பை மேலும் வலுவாக்க பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய 2018ஆம் ஆண்டு முதல் ரயில்வே துறை அல்லாத ஐஐடி, என்ஐடி, வடிவமைப்புப் பொறியியல் ஆராய்ச்சி நிலைய தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு ஆய்வுசெய்யப்பட்டு ஆலோசனைகள் பெறப்படுகின்றன.
இந்த ஆய்வு பெரிய பாலங்கள், குறைந்த வேகத்தில் ரயில் இயக்கப்படும் பாலங்கள், 80 ஆண்டுகளுக்கு மேலான பாலங்கள் ஆகியவற்றில் நடத்தப்படுகின்றன. இதுபோன்ற ஆய்வுகளின் மூலம் மும்பையில் 49 சாலை மேம்பாலங்கள் சீர்செய்ய வேண்டிய நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது.