மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது, "தென்மேற்குப் பருவமழை வழக்கத்தைவிட 24 விழுக்காடு கூடுதலாக கிடைத்துள்ளது. தற்போது வரை, வடகிழக்குப் பருவமழை 45 விழுக்காடு பற்றாக்குறை மழையாக கிடைத்துள்ளது. மழை நீர் தேங்கும் விவகாரத்தில் மக்கள் குழப்பப்பட்டு வருகின்றனர். கடந்த பத்து ஆண்டுகளில் மழையை வைத்து மழை நீர் தேக்கம் குறித்து பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 9ஆயிரத்து 393 முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. இந்த முகாமில் 7 லட்சத்து 39 ஆயிரத்து 400 பேர் தங்கலாம். வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கும் அறிவிப்புகளின் படி பணிகள் நடைபெறுகிறது. அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க வேண்டிய வடகிழக்கு பருவமழை தாமதமாக மாத இறுதியில் தொடங்கியுள்ளது. வடகிழக்குப் பருவமழை காலங்களில் ஏற்படும் தொற்று நோய்களுக்குத் தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன.