தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'எஸ்எஸ்சி இணைய தளத்திற்கு என்ன ஆச்சு..! தொழில்நுட்பக் கோளாறால் தேர்வர்கள் அவதி - மத்திய அரசு பணி

தேர்விற்கு விண்ணப்பிப்பதற்காக கால அவகாசம் நெருங்கி வரும் நேரத்தில் எஸ்எஸ்சி இணையதளம் முடங்கியதால் ஆன்லைனில் தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாமல் தேர்வர்கள் அவதியடைந்தனர். இந்நிலையில் இணையதளம் மீண்டும் செயல்பட துவங்கியுள்ளது.

தொழில்நுட்ப கோளாறால் முடங்கிய எஸ்எஸ்சி இணையதளம்
தொழில்நுட்ப கோளாறால் முடங்கிய எஸ்எஸ்சி இணையதளம்

By

Published : Feb 16, 2023, 7:29 PM IST

அரசுப் பணி என்பது பெரும்பாலான மக்களின் கனவாகும். காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் எப்போது வெளியாகும் என்று வெகுநாட்களாக தேர்விற்கு தயாராகும் நபர்கள் காத்திருப்பார்கள். இதுபோன்ற அரசு பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நெருங்கும் நேரங்களில் தொழில் நுட்பக் கோளாறு காரணத்தால் தேர்வர்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

மத்திய அரசின் காலிப்பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தும் எஸ்எஸ்சி இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்காக கால அவகாசம் நெருங்கும் தருவாயில் முடங்கியதால் தேர்வுக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாமல் தேர்வர்கள் அவதியடைந்தனர். இதனை உடனடியாக சரி செய்யக்கோரி சு.வெங்கடேசன் எம்.பி., எஸ்எஸ்சி இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, ”மல்டி டாஸ்கிங் (நான் டெக்னிக்கல்) ஸ்டாஃப் மற்றும் ஹவில்தார் (சி. பி.ஐ.சி & சி.பி என்) பதவிகளுக்கான ஸ்டாப் செலக்சன் கமிசன் தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகின்றன.

இந்த தேர்விற்கு விண்ணப்பம் செய்ய கடைசித் தேதி 17.02.2023. ஆனால் நேற்று (15.02.2023) விண்ணப்பிப்பதற்கான எஸ்எஸ்சி இணைய தளம் இயங்கவில்லை. இன்று சரியாகுமா என தெரியவில்லை. பல விண்ணப்பதாரர்கள் என்னைத் தொடர்பு கொண்டு இதில் தலையிட்டு தீர்வுக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார்கள். ஸ்டாஃப் செலக்சன் கமிஷனுக்கும் இத்தகைய புகார்கள் நேரடியாக சென்றிருக்கும்.

எனவே, உடனே இணையதளத்தை சரி செய்து ஆன்லைன் விண்ணப்பங்களை பதிவு செய்ய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கடைசி தேதி நெருங்கும் வேளையில் இப்படி தொழில் நுட்ப பிரச்னைகள் குறுக்கிட்டு இருப்பதால் நேர இழப்பை ஈடுகட்டும் வகையில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும். இதுகுறித்து ஸ்டாஃப் செலக்சன் கமிஷன் இயக்குனருக்கு இன்று கடிதம் எழுதியுள்ளேன். தீர்வு விரைவில் காணப்படுமென்று நம்புகிறேன்’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று 15.2.2023-இல் எஸ்எஸ்சி இணையதளம் முடங்கியதால் தேர்விற்கு விண்ணப்பிக்க முடியுமோ முடியாதோ என்று தேர்வர்கள் பெரும் கவலை அடைந்தனர். இந்நிலையில் முடங்கிய எஸ்எஸ்சி இணையதளம் மீண்டும் செயல்பட துவங்கியதால் தேர்வர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பணி நியமன முறைகேடு; நடவடிக்கை எடுக்க ஆளுநர் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details