இலங்கை கடத்தல் மன்னனும் நிழல் உலக தாதாவுமான அங்கொடா லொக்கா மதுரை கூடல்நகர் பகுதியில் இரண்டு மாதங்கள் தங்கியிருந்தது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அவருக்கு உதவிய ஆனையூரில் உள்ள வழக்கறிஞர் சிவகாமி சுந்தரியின் பெற்றோர் வீடு, அலுவலகம் மற்றும் தொடர்பில் இருந்த நிறுவன அலுவலகம் ஆகிய இடங்களில் சிபிசிஐடி காவல்துறையினர் இன்று விசாரணை நடத்தினர்.
அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் அங்கொடா லொக்கா மற்றும் அவரது கூட்டாளி தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவ்வழக்கில் கைதான சிவகாமி சுந்தரியின் செல்போன் உரையாடல் அடிப்படையிலும் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மற்றும் கோயம்புத்தூரை சேர்ந்த சிபிசிஐடி அலுவலர்கள் குழு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.