மதுரை:இலங்கையில் தற்போது கடும் பொருளாதார தேக்க நிலை காரணமாக, அங்கு அரிசி, பருப்பு, காய்கறிகள், இறைச்சி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. மேலும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வாகனங்கள் பல கி.மீ. தூரம் காத்துக் கிடக்கும் சூழலும் உருவாகியுள்ளது.
இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு பொருள்களின் விலை உயர்ந்திருப்பதால், தமிழீழ மக்கள் தமிழ்நாடு நோக்கி படையெடுக்கும் சூழல் உருவாகியுள்ளது. கடந்த மார்ச் 21 ஆம் தேதி இந்திய எல்லைக்குட்பட்ட தனுஷ்கோடி பகுதிக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரும், பிறகு அன்றிரவு மேலும் 10 பேரும் என மொத்தம் 16 பேர் அகதிகளாக வந்து சேர்ந்தனர்.
இவர்களை கடலோர காவல்படையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் தற்காலிகமாக தங்க வைத்துள்ளனர். அகதிகளாகக் கணக்கிற் கொள்ளாமல் சட்டவிரோத குடி நுழைவு என்ற அடிப்படையில், இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். பின்பு 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள், அவர்களது உறவினர்கள் வசிக்கும் அகதி முகாம்களுக்கு அனுப்பப்படுவர் என்றும்18 வயதுக்கு மேல் உள்ள நபர்கள் சென்னையிலுள்ள புழல் சிறைக்கு கொண்டு செல்லப்படுவர் எனவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.