கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து நாட்டில் பரவத் தொடங்கிய கரோனாவால் கடைக்கோடி கிராமங்கள்கூட பாதித்தன. தொடர்ச்சியான ஊரடங்கு, அறிகுறிகள் தென்படும்பட்சத்தில் கட்டாயமாக்கப்பட்ட கரோனா பரிசோதனை என எளிய மக்கள் திக்குமுக்காடிப் போயினர்.
நாளுக்கு நாள் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் அதே வேகத்தில் மருத்துவம் பலனின்றி உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதில் இதய நோய், ஆஸ்துமா, நீரிழிவு உள்ளிட்ட துணை நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் விரைவாகப் பாதிக்கப்பட்டனர், சிலர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.
தற்போது, நாடு முழுவதும் சிற்சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கின்றது. ஆனால், பொது போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இது உலக விநியோகச் சங்கிலியை வெகுவாகப் பாதித்துள்ளது. இதனால் பொருளாதாரம் சரிவை எட்டியுள்ளது.
மற்ற துறைகளைப் போன்றே மருந்துத் துறையும் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. இது தொடர்பாக இத்துறையில் 25 ஆண்டு கால அனுபவம் கொண்ட மருந்து விற்பனை மேலாளர் பாண்டியராஜனிடம் கேட்டோம். அவர் கூறுகையில், ”பொதுவாக எந்தவித மாற்றமும் இல்லாத வளர்ச்சியை நோக்கி மட்டுமே செல்கின்ற துறையாக உணவு, மருந்துத் துறைகளையே குறிப்பிடுவது உண்டு. ஆனால் கரோனா நெருக்கடி இந்தத் துறைகளை முற்றிலும் புரட்டிப் போட்டுவிட்டது.
பொதுமுடக்கத்திற்குப் பிறகு ஏப்ரல், மே மாதங்களில் மிகக் கடுமையான இழப்பை மருந்துத் துறை சந்தித்தது. இதற்கிடையே மே மாதத்தில் சற்று தலைநிமிர்ந்த நிலையில், கரோனா தொற்றின் பரவல் மிக வேகமாகத் தொடங்கியது. இதன் காரணமாக தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டன. இதனால் மீண்டும் மருந்து விற்பனை பெருமளவு சரியத் தொடங்கியது. மருந்து விற்பனையைப் பொறுத்தவரை மாவட்டம் விட்டு மாவட்டங்கள் செல்ல வேண்டிய பணி முக்கியமானதாக இருக்கிறது.
இந்நிலையில், விற்பனையில் ஈடுபட்டிருக்கின்ற நபர்கள் தங்களது மாவட்டங்களை விட்டுச் செல்ல முடியாத நிலையில் சிக்கிக் கொண்டனர். ஆனால் இ-பாஸ் இவர்களுக்கு கைக்கொடுத்தது. இதனால், இதயநோய், சர்க்கரை, சுவாச சிக்கல்கள் சார்ந்த மருந்துகளின் விற்பனையில் பின்னர் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது.
காய்ச்சல், தலைவலி, இருமல், சளி போன்ற நோய்கள் சார்ந்த மருந்துகளின் விற்பனையில் தற்போதுவரை முன்னேற்றம் இல்லை. 2019 ஜூன் மாத விற்பனைக்கும் 2020 ஜூன் மாத விற்பனைக்கும் மிகப் பெரிய வேறுபாடு உள்ளது” என்கிறார்.
AIOCD AWACS என்ற இணையதளத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் மருந்துகளின் விற்பனை விகிதம் கடந்த ஜூன் மாதம் 2.5 விழுக்காடாக இருந்த நிலையில், ஜூலை மாதம் 0.2 விழுக்காடாகக் குறைந்தது. அதேபோன்று இதயவியல் சார்ந்த மருந்துகளின் விற்பனை 13.9-லிருந்து 13.1-ஆகக் குறைந்துள்ளது.