மதுரை மாநகருக்குள் அமைந்துள்ள மணி நகரம் சில நாள்களுக்கு முன்பாக இந்தியா முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது.
அதற்கான காரணம் பார்வைக் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி பூரண சுந்தரி, ஐஏஎஸ் தேர்வில் தேசிய அளவில் 286 ஆவது இடம் பிடித்து சாதனை படைத்தது தான்.
பூரண சுந்தரி, மதுரை சிம்மக்கல் அருகேயுள்ள மணி நகரத்தில் தனது பெற்றோர் முருகேசன்-ஆவுடை தேவி, தம்பி சரவணகுமார் ஆகியோருடன் வசித்து வருகிறார்.
பூரண சுந்தரி ஐஏஎஸ் குடும்பத்தினர் பார்வைக் குறைபாடு உள்ள நிலையிலும் வங்கியில் பணியாற்றிக் கொண்டே ஐஏஎஸ் தேர்வில் பூரண சுந்தரி தேர்ச்சி பெற்றது ஒட்டுமொத்த மதுரை மக்களையும் பெருமையடையச் செய்துள்ளது.
கடந்த சில நாள்களாக பூரண சுந்தரியின் வீடு நண்பர்களாலும் உற்றார் உறவினர் மற்றும் முகம் தெரியாத அனைவராலும் நிரம்பி வழிகிறது. சிறிய வீடுதான், ஆனால் மிகப் பரந்த உள்ளங்களைக் கொண்ட மாளிகை என்று சொன்னால் அது மிகையல்ல.
அவரைக் காண வீட்டிற்குள் செல்லும்போது,
'மாதர றங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச் செய்து வாழ்வமடி'
-என்ற முண்டாசுக் கவி பாரதியின் வரிகள் பூரண சுந்தரியின் வீட்டு சுவரில் கண்சிமிட்டி மிளர்கிறது.
ஐஏஎஸ் தேர்வில் நான்காவது முறையாக முயற்சித்து வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் இருந்த பூரண சுந்தரியிடம் பேசினோம்.
பூரண சுந்தரிக்கு படித்துக் காட்டும் அவரது தந்தை முருகேசன் ''எனக்கு பார்வை குறைபாடு ஐந்து வயதில் ஏற்பட்டது. ஆனாலும் எனது பெற்றோர்களின் கவனிப்பும் ஆதரவும் அன்பும் தான் என்னை இவ்வளவு பெரிய உயரத்திற்கு கொண்டு வந்துள்ளது. என்னுடைய பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், நண்பர்கள் அனைவருமே ஒவ்வொரு விதத்திலும் எனக்குப் பேருதவி செய்துள்ளனர்.
என்னால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் நானே விதைத்துக் கொண்டாலும் சுற்றி என்னோடு இருந்தவர்களின் ஊக்கமும் மிக முக்கிய காரணம்'' என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
தொடர்ந்து, தான் பயின்ற மதுரை பாத்திமா கல்லூரி முதல்வரும் பேராசிரியர்களும் அழைத்து தன்னை பெருமைப்படுத்தியதை மிக மகிழ்ச்சியுடன் நினைவு கூறுகிறார். தன்னம்பிக்கையும் விடா முயற்சியுமே தன்னுடைய மூலதனமாக கொண்டுள்ள சுந்தரி பத்தாம் வகுப்பில் அவர் பயின்ற பிள்ளைமார் சங்க மேல்நிலைப் பள்ளியில் முதலிடம் பெற்றதை பெருமைக்குரிய நிகழ்வாக குறிப்பிடுகிறார். தனக்காக நியமிக்கப்பட்ட சிறப்பு ஆசிரியர்களை ஒவ்வொருவரின் பெயர் சொல்லி நினைவுபடுத்தி நன்றி கூறுகிறார்.
மீண்டும் பூரண சுந்தரியிடம் பேசினோம். அதில், ''ஒவ்வொரு வகையிலும் எல்லோரும் எனக்கு உதவி செய்தாலும் கூட எங்கள் குடும்ப நண்பர் நாகார்ஜுனா சார் தான் என்னுடைய வளர்ச்சிக்கு முக்கியமான காரணி. ஐஏஎஸ் தேர்வு முடிவுகள் வரும்போது கூட அவர்தான் என்னை உற்சாகப்படுத்தினார். கண்டிப்பாக நீ வெற்றி பெறுவாய் என்ற அவரது சொல் இப்போதும் என் காதுகளில் எதிரொலிக்கிறது'' என மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
பூரண சுந்தரிக்கு வகுப்பு ஆசிரியராகவும் தற்போது பிள்ளைமார் சங்க பள்ளியின் தலைமை ஆசிரியராகவும் பொறுப்பிலுள்ள சாந்தி பேசுகையில், ''மிக மதிநுட்பம் வாய்ந்த மாணவி. எங்கள் பள்ளி நிர்வாகத்தின் சார்பாக இது போன்ற சிறப்பு மாணவ - மாணவியருக்கு தனி கவனம் கொடுத்து அவர்களை ஊக்குவிக்கிறோம். அது போன்ற தனி கவனத்தோடு வார்க்கப்பட்டவர்தான் எங்கள் மாணவி பூரண சுந்தரி. இந்தியாவின் மிக உயர்ந்த ஐஏஎஸ் தேர்வில் அவர் வெற்றி பெற்றது எங்களுக்கும் பெருமை அவருக்கும் பெருமை'' என்கிறார்.
பாடத்தில் மட்டுமன்றி கட்டுரை, பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி உள்ளிட்ட தனித் திறமைகளுக்கும் சொந்தக்காரர் அவர். ஒரு போட்டியில் கலந்துகொண்டார் என்றால் பரிசு வாங்காமல் அவர் திரும்புவதில்லை என்று பெருமையோடு நினைவு கூறுகிறார் பூரண சுந்தரியின் மற்றொரு ஆசிரியர் ஜெயந்தி கண்ணாமிர்தம்.
பூரண சுந்தரின் தந்தை முருகேசன் பேசுகையில், ''மிகுந்த சிரமங்களுக்கிடையே தான் பூர்ணாவை படிக்க வைத்து ஆளாக்கி இருக்கிறோம். அவரோடு அருகில் அமர்ந்து நான் ஒவ்வொரு நூலையும் வாசித்துக் காட்டுவேன்.
அதை அப்படியே உள்வாங்கி அதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் என்னிடம் மறுபடியும் கேட்பார். நான் விளக்கம் அளிப்பேன். பள்ளி பயிலும் காலத்தில் இருந்து கல்லூரி முடிக்கும் நாள் வரை நான் தான் அழைத்துக் கொண்டு போய் மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருவேன்'' என்கிறார்.
தாயார் ஆவுடைதேவி கூறுகையில், ''பூரணா தேர்வுக்காக சென்னை பெங்களூர் செல்லும் போது கூடவே நானும் சென்று வருவேன். அவள் பட்ட கஷ்டங்களுக்கு இப்போது விடிவு பிறந்து இருப்பதாகவே நான் எண்ணுகிறேன்'' என்று சொல்லும்போது அவரது கண்ணில் கண்ணீர் பெருகுகிறது.
மீண்டும் பூரண சுந்தரியிடம் பேசினோம். அவர், ''என்னுடைய லேப்டாப் பாஸ்வேர்ட் என்ன தெரியுமா என்று நம்மிடம் 'பொடி' வைக்கிறார். பிறகு அவரே 'பூரண சுந்தரி ஐஏஎஸ்' என்பதுதான் அந்த பாஸ்வேர்டு. நான் பிளஸ் டூ படிக்கும் போதே இந்த பாஸ்வேர்டை உருவாக்கி விட்டேன் என்று மகிழ்ச்சியுடன் பூரிக்கிறார். நீ என்னவாக ஆக வேண்டும் என்று நினைக்கிறாயோ அதுவாகவே மாறி விட வேண்டும் என்ற எம்எஸ் உதயமூர்த்தியின் சிந்தனை வரிகளை நமக்கு நினைவுபடுத்துகிறார்.
உங்கள் கனவு இப்போது நனவாகி விட்டது அடுத்ததாய் உங்கள் இலக்கு என்ன என்ற நமது கேள்விக்கு, மத்திய மாநில அரசுகள் எவ்வளவோ மக்கள் நலத் திட்டங்களை தீட்டி உள்ளன அவற்றையெல்லாம் சிந்தாமல் சிதறாமல் அடித்தட்டு மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்து அவர்களின் வாழ்க்கையை சிறிதளவேனும் மேம்படுத்த வேண்டும் என்பதுதான் எனது லட்சியமும் சபதமும் என்கிறார் தீர்க்கமாக.
ஆர்ப்பாட்டமான பொருளாதார பின்னணி இல்லை, சொத்து சுகம் கொண்ட குடும்ப பாரம்பரியமும் இல்லை, பெற்றோரின் ஊக்கம் நண்பர்கள் ஆசிரியர்களின் அரவணைப்பு, அதற்கும் மேலாக தன்னுடைய ஓய்வில்லா உழைப்பு விடாமுயற்சி இவை தான் பூரண சுந்தரி என்ற பெயருக்கு பின்னால் ஐஏஎஸ் என்ற பெருமையை உருவாக்கித் தந்திருக்கின்றன.
தன்னுடைய வழிகாட்டிகளாக வீரத்துறவி விவேகானந்தரையும் கர்மவீரர் காமராஜரையும் மக்கள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமையும் தன் உள்ளத்தில் சிலையாக்கி ஆலயமாய் வழிபடுகின்ற பூரணாவுக்கு ஈடிவி பாரத் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்த போது உள்ளபடியே நெகிழ்ந்து போகிறார்.
இதையும் படிங்க:'தினமும் அடிபடாத நாட்களே கிடையாது... ஆனாலும் இந்தத் தொழிலை விரும்பிச் செய்கிறேன்' - ஆண்களுக்கு நிகராக அசத்தும் இரும்பு மனிதி!