மதுரை :செயற்கையாக உருவாக்கப்பட்ட மௌனத்தின் மூலமாக நிலவும் அமைதியால் அருகாட்சியகங்கள் எப்போதும் பார்வையாளர்களிடமிருந்து அந்நியப்பட்டே இருக்கும்.
இந்த அரிச்சுவடி விதியிலிருந்து கம்பீரமாக விலகி நிற்கிறது மதுரையில் இருக்கும் காந்தி நினைவு அருங்காட்சியகம். சுமார் 350 வருடங்களுக்கு முந்தைய நாயக்கர் கால கட்டடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் காந்தி நினைவு அருங்காட்சியகம், காந்தி என்ற மந்திரச் சொல் கொண்டு வந்து தரும் பேரமைதியுடன், அவரது வாழ்க்கை வரலாற்றையும், தத்துவங்களையும் பார்வையாளர்களுக்கு கடத்திக் கொண்டிருக்கிறது.
வைகையாற்றின் தென்பகுதியில், சுமார் 13 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது காந்தி நினைவு அருங்காட்சியகம். நாயக்க பேரரசி ராணி மங்கம்மாள் கோடை காலத்தில் ஓய்வெடுப்பதற்காக கட்டப்பட்ட அரண்மனையில் அந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது.
கடந்த 1948 ஜனவரி 30ஆம் தேதி நடந்த காந்தி கொலை செய்யப்பட்டதற்கு பின்பு, அவரின் நினைவை போற்றும் வகையில் மதுரையில் அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. காந்தியின் பெயரில் இன்று 7 அருங்காட்சியகங்கள் உள்ளன. அவைகளில் காலத்தால் மூத்ததும், தென்னிந்தியாவில் இருக்கும் ஒரே அருங்காட்சியகமும் இதுதான்.
நேரு திறந்து வைத்த அருங்காட்சியகம்
காந்தி நினைவு அரங்காட்சியகம். காந்திக்கு நினைவைப் போற்றும் வகையில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துபோது, அது மதுரையில் அமைக்கப்பட்டது. இதற்காக அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் காமராஜர் 13 ஏக்கர் நிலத்தை ஒதுக்கித் தந்தார். பணிகள் நிறைவடைந்ததும், 1959 ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் நாளில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார்.
"இந்த அருங்காட்சியகம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பிரிவில் இந்திய சுதந்திர போராட்ட வரலாறு குறித்த செய்திகளும், இரண்டாவது பிரிவில் மகாத்மா காந்தியடிகளின் வாழ்கை வரலாறும், மூன்றாவது பிரிவில் காந்தியடிகள் பயன்படுத்திய பொருள்களும், மாதிரி பொருள்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, காந்தி சுடப்பட்ட போது அணிந்திருந்த வேஷ்டி அவரின் ரத்தக்கறையுடன் பாதுகாக்கப்படுகிறது. நான்காவது பிரிவில் காந்திக்கும் தமிழ்நாட்டிற்கும் உள்ள உறவை விளக்கும் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன" என அருங்காட்சியகத்தின் அமைப்பைப் பற்றி விளக்குகிறார் அதன் இயக்குனராக இருக்கும் நந்தாராவ்.
காந்தி நினைவு அரங்காட்சியகம். இந்த அருங்காட்சியகத்தில், காந்தி நேரடியாக பயன்படுத்திய 14 பொருள்களும், அவர் பயன்படுத்திய பொருள்களின் மாதிரிகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கோட்சே பயன்படுத்திய துப்பாக்கியின் மாதிரியும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கொண்டு செல்லப்பட்ட காந்தி அஸ்தியின் ஒரு பகுதி இங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது. அது வைக்கப்பட்டிருக்கும் இடத்தில், வெள்ளிக்கிழமை தோறும் மாலை 5.30 மணிக்கு சர்வசமய பிரார்த்தனை நடைபெறுகிறது.
கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
காந்தியின் தத்துவம் மற்றும் கொள்கைகளை இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது அருங்காட்சியகத்திற்குள் செயல்படும் காந்திய கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம். இது மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வருகிறது.
"இங்கு காந்திய சிந்தனை சார்ந்த சான்றிதழ், பட்டயப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. அதைத்தவிர யோகா, தியானம், உடல் ஆரோக்கியம் சார்ந்த படிப்புகளும் வழங்கப்படுகின்றன. இங்கு யோகா பயின்றவர்கள் பள்ளிக் கல்லூரிகளில் யோகா பயிற்றுனர்களாக உள்ளனர். இத்துடன் இந்தி மொழி பயிற்சியும் வழங்கப்படுகிறது. அத்துடன் காந்தியடிகளின் நிர்மாணத்திட்டங்களில் ஒன்றான சுயவேலை வாய்ப்பு பயிற்சியும் வழங்கப்படுகின்றன" என்கிறார் அருங்காட்சியகத்தின் கல்வி அலுவலர் நடராஜன்.
காந்தி நினைவு அரங்காட்சியகம். காந்தி வாழ்ந்த சேவா கிராமத்தில் அவர் வசித்து வந்த குடிசையின் மாதிரி வடிவம் ஒன்று காந்தி குடில் என்ற பெயரில் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியக வளாகத்தில் செயல்படும் நூலகம் மாணவர்களுக்கும், காந்திய ஆராய்ச்சியாளர்களுக்கும் பொக்கிஷமாக விளங்கி வருகிறது.
"வினோபா பாவே, ஜெயப்ரகாஷ் நாராயணன், காமராஜர், அமெரிக்க காந்தி என்று அழைக்கப்படும் மார்ட்டின் லூதர் கிங், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி ஆகியோர் இந்த நூலகத்திற்கு வந்துள்ளனர். இந்திய நூலகத் தந்தை எஸ் ஆர் ரங்கநாதன், இதனை சிறப்பு நூலகமாக அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியுள்ளார்.
காந்தியம் தொடர்பான நூல்களோடு, சுமார் 30 ஆயிரம் நூல்கள் இங்கே உள்ளன. மகாத்மா காந்தி நடத்திய யங் இந்தியா, ஹரிஜன் பத்திரிக்கைகளின் மூலப்பிரதிகள் இங்குள்ளன. மகாத்மா காந்தி அடிகள் எழுதிய 28,700 கடிதங்களின் நகல்கள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன" என்கிறார் நூலகர் முனைவர் ரவிசந்திரன்.
வெறும் வரலாற்றை சுமந்து நிற்கும் கட்டடமாக மட்டும் இல்லாமல் காந்தியின் தத்துவங்களை உலகிற்கு அழுத்தமாக சொல்லி வருகிறது இந்த அருங்காட்சியகம்.
அது தன்னுள் நுழையும் எல்லோர் மனதிலும், காந்தியின் தத்துவங்களை உணரவும் செய்து விடுகிறது. இதற்கு அங்கு சென்று வந்தவர்களே சாட்சி...