தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கையால் துணி துவைப்பது எப்படி? - மதுரையில் கற்றுக் கொண்ட ஆஸ்திரேலிய மாணவர்கள்!

Australia students Educational tour in India: ஆஸ்திரேலியாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு கல்விச் சுற்றுலா வந்த மாணவர்கள், கைகளால் துணி துவைத்த புனித லசால் தொழிற்பயிற்சி பள்ளி மாணவர்களைக் கண்டு வியப்படைந்தனர். இது குறித்த ஒரு சுவாரஸ்யமான ஒரு செய்தித் தொகுப்பை காணலாம்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 5, 2023, 10:26 AM IST

கையால் துணி துவைப்பது எப்படி? - மதுரையில் கற்றுக் கொண்ட ஆஸ்திரேலிய மாணவர்கள்!

மதுரை:மதுரை மாவட்டம் துவரிமான் அருகே இளைஞர் நகரில் ஆதரவற்ற ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கி வருகிறது, 'புனித லசால் தொழிற்பயிற்சி பள்ளி'. அரசு அங்கீகாரம் பெற்ற இப்பள்ளியில் எலக்ட்ரீஷியன், வெல்டிங், பிட்டர் உள்ளிட்ட பயிற்சிகளை ஒவ்வொரு ஆண்டும் 50 மாணவர்களுக்கு அளித்து, உரிய வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தி தருகிறது. இங்கு விடுதி வசதியும் உண்டு.

'பாய்ஸ் டவுன்' எனப்படும் இவ்வமைப்பைத் தோற்றுவித்த புனித லசால் சகோதரர்களின் பெயரில், உலகெங்கும் பல நாடுகளில் இயங்கும் இக்கல்விக்கூடங்கள், முற்றிலும் அடித்தட்டு மக்களுக்காக செயல்படுகின்றன. அந்த வகையில், இக்கல்வி நிறுவனங்களில் இருந்து கல்வி மற்றும் பண்பாட்டு சுற்றுலாவாக ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் உள்ள இப்பயிற்சிப் பள்ளிக்கு பல்வேறு நாடுகளில் இருந்து மாணவர்கள் வருவது வழக்கம்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் உள்ள ஓகில் கல்லூரியில் (Oakhill College, Australia) 11, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 54 பேர் மதுரையிலுள்ள புல்லூத்து இளைஞர் நகர் வளாகத்தில் உள்ள புனித லசால் தொழிற்பயிற்சி பள்ளிக்கு வந்துள்ளனர். இங்கு 4 நாட்களாக தங்கிய இம்மாணவர்கள் மரம் நடுதல், ஓவியம் வரைதல், நடனமாடுதல் போன்ற செயல்பாடுகளில் ஆர்வமுடன் ஈடுபட்டனர்.

இதனிடையே, தமிழ்நாட்டில் மாணவர்கள் தங்களது உடைகளை தாங்களே துவைப்பதை ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த இம்மாணவர்கள் மிகவும் வியப்புடன் கண்டனர். இதைப்போல, அவர்களும் தங்களின் உடைகளை தாங்களே துவைத்து உலர வைப்பது எப்படி என கற்றுக் கொண்டனர்.

இது குறித்து ஆஸ்திரேலிய மாணவி ஒருவர் கூறும்போது, “கல்விச் சுற்றுலாவாக வந்த எங்களுக்கு, தமிழ்நாட்டில் கலை, கலாச்சாரம், பண்பாடு உள்ளிட்ட வாழ்வியல் சார்ந்த விஷயங்கள் பெரும் வியப்பளிக்கிறது. இங்கு உடுத்தும் உடைகளை தாங்களே துவைத்து உலர வைத்து உடுத்துவது மிகவும் ஆச்சரியத்தை அளிக்கிறது. இயந்திரமயமான எங்களின் நாட்டில் இது போன்று செய்வதே இல்லை.

சிவகங்கை மாவட்டம் சூராணத்தில் புனித ஜேம்ஸ் உயர்நிலைப்பள்ளிக்கு சென்ற நாங்கள், அங்கு சுற்றுச்சுவரை கட்டினோம். பின்னர், இளைஞர் நகர் வளாகத்தில் நாங்கள் நட்ட மரங்களெல்லாம், எங்களின் நினைவுகளைத் தாங்கி வளரும். மீண்டும் இந்தியா வந்தால், கண்டிப்பாக இவற்றையெல்லாம் பார்ப்போம். இங்கு வந்த அனுபவங்களை சக மாணவர்களுக்கும் நாங்கள் பகிர்ந்து கொள்வோம்' என்றனர்.

இப்பயிற்சி பள்ளியின் தாளாளர் அருட்சகோதரர் இனிகோ அமலன், 'உலகம் முழுவதும் 82 நாடுகளில் இயங்கி தரமான, வாழ்வியல் கல்வியை இளைஞர்களுக்கு வழங்குவதே எங்களின் நோக்கம். மதுரை உயர் மறை மாவட்ட கத்தோலிக்க ஆயரின் வேண்டுகோளுக்கு இணங்க கடந்த 1961ஆம் ஆண்டு, இந்த இளைஞர் நகரில் தெலசால் அருட்சகோதரர்கள் தங்களது கல்விப் பணியைத் துவங்கி, 62 ஆண்டுகளை எட்டியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி மாநகரிலுள்ள ஓகில் கல்லூரியின் மாணவர்கள், தமிழ்நாடு மாணவர்களிடையே சகோதரத்துவ மனப்பான்மை, புரிதலோடு விட்டுக்கொடுத்து மதம், இனம், மொழி கடந்த நட்புணர்வுடன் செயல்பட்டனர். 500 மரக்கன்றுகள் நடப்பட்டன' என்றார்.

இதையும் படிங்க:எடப்பாடி பழனிசாமியை சந்தித்த தமிமுன் அன்சாரி - காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details