தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 14, 2020, 12:02 PM IST

Updated : May 1, 2020, 11:33 AM IST

ETV Bharat / state

'கரோனாவை எதிர்க்கும் ஆற்றல் தென்கிழக்காசிய மக்களுக்கு இயல்பிலேயே உண்டு' - மூத்த விஞ்ஞானி மாரியப்பன்

மதுரை: கரோனா வைரஸை எதிர்க்கும் ஆற்றல் தென்கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு இயல்பாகவே அவர்களது உடலில் உண்டு என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கொசுத் தடுப்பு ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி மாரியப்பன் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியுள்ளார்.

scientist mariappan about corona
scientist mariappan about corona

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் பெருந்தொற்று இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் இதன் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வைரஸை எதிர்த்துப் போராடும் ஜீன்களை இயல்பாகவே தென்கிழக்காசிய மக்கள் கொண்டுள்ளனர்.

மதுரைக் கிளை மூத்த விஞ்ஞானி மாரியப்பன்

இதன் காரணமாகவே இப்பகுதிகளில் உயிரிழப்பின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது என்கிறார் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கொசுத் தடுப்பு ஆய்வு மையத்தின் மதுரைக் கிளை மூத்த விஞ்ஞானி மாரியப்பன். இவர், பல்வேறு மாநில சுகாதார அமைப்புகளுக்கு ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார். ஏறக்குறைய இத்துறையில் 40 ஆண்டுகால அனுபவம் கொண்ட மாரியப்பன், ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், "கரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக உலகின் பல்வேறு நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவும் அதற்கு விதிவிலக்கு அல்ல.

கட்டுரைகளின் விளக்கம் தந்த மாரியப்பன்

2000ஆம் ஆண்டிற்கு பின் வந்த சார்ஸ் வைரஸ்கள்

2000ஆம் ஆண்டுக்குப் பின்னர் பல்வேறு விதமான வைரஸ்கள் உலகம் முழுவதும் தோன்றியுள்ளன. இதன் காரணமாக உலக நாடுகளில் பல்வேறு விதமான தாக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதிலொன்றுதான் சிவியர் அக்யூட் ரெஸ்பிரேட்டரி சின்ட்ரோம் என்று அழைக்கக்கூடிய சார்ஸ். இது 2003ஆம் ஆண்டு உலகின் பல்வேறு நாடுகளைத் தாக்கியது. 16 நாடுகளில் இந்த வைரஸின் தாக்கம் கூடுதலாக இருந்தது. இதுவும் கூட கரோனா வைரஸை ஒட்டியதுதான். விலங்கினத்திலிருந்து மனிதரிடம் பரவக்கூடிய ஒன்று. 2003ஆம் ஆண்டு ஏப்ரல் வரை நமது நாட்டில் எந்தவித பாதிப்பையும் இந்த வைரஸ் ஏற்படுத்தவில்லை.

வைரஸ்களை பற்றிய ஆய்வுக் கட்டுரைகள்

அதே ஆண்டு ஏப்ரல் மாதம் சிடி அலர்ட் என்ற நியூஸ் லெட்டர் நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஆஃப் கம்யூனிகபிள் டிஸ்சீஸ் என்ற பத்திரிகையில் வால்யூம் 7 எண் 4இல் சார்ஸ் வைரஸ் உலக நாடுகளில் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும், இந்தியாவில் எந்தவித விளைவையும் ஏன் ஏற்படுத்தவில்லை என்பது குறித்தும் விளக்கக்கூடிய கட்டுரையொன்று வெளியாகியுள்ளது.

தென் கிழக்காசியா மக்களை கரோனா தாக்காது

தற்போது பரவி வரும் கரோனா வைரஸ் பெருந்தொற்று ஐரோப்பா மற்றும் அமெரிக்க கண்டங்களில் ஏற்படுத்தியதைப் போன்ற தாக்கத்தை, ஏற்படுத்தாமைக்கு முக்கியக் காரணம், தென் கிழக்காசியாவைச் சேர்ந்த மக்களின் உடம்பில் உள்ள இயல்பான ஜீன் அமைப்புதான். இருந்தபோதும்கூட நமது இந்திய அரசு கரோனா வைரஸ் தொற்றின் தீவிரத்தைக் குறைக்க பல்வேறு சிறப்பான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அம்முயற்சிகளை உலக நாடுகளெல்லாம் பாராட்டுகின்றன.

இந்தியாவிற்கு வந்த சிகா வைரஸ்

ஐசிஎம்ஆரின் கீழ் இயங்கும் நேஷனல் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் வைராலஜி கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இதுபோன்ற தொற்றுகள் குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு அதுகுறித்த கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு பரவிய சிகா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தியதும் இந்த நிறுவன ஆய்வுகளின் வெளிப்பாடுதான். குஜராத் மாநிலத்தில் இருவருக்கும், 2017ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரியில் ஒருவருக்கும் இந்த சிகா வைரஸின் அறிகுறிகள் கண்டறியப்பட்டன. ஏடிஸ் வகை கொசுக்கள் மூலமாகப் பரவக்கூடிய இந்த வைரஸை இனங்கண்டு உடனடியாக கட்டுக்குள் கொண்டு வந்தோம்.

அதேபோன்று கோவிட் 19 என்ற கரோனா தொற்றை முழுவதுமாகக் கட்டுக்குள் கொண்டு வர இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு நாம் முழுமையாக ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.

அரசுக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்

மேலும் அவர் கூறுகையில், "நேஷனல் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் வைரலாஜி நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஜி. வர்கீஸ் மற்றும் கல்யாண் பானர்ஜி ஆகியோர் 1990ஆம் ஆண்டே கரோனா வைரஸ் வௌவால் மூலமாகத்தான் மனிதர்களுக்குப் பரவுகிறது என்பதை கட்டுரையாகப் பதிவு செய்திருந்தனர். கரண்ட் சைன்ஸ் இதழில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் வௌவால்கள் மூலமாக ஏறக்குறைய 31 வைரஸ்கள் பரவுவதாகப் பதிவு செய்துள்ளனர்.

வௌவால் மூலமாகப் பரவிய கரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்காவில் 1985ஆம் ஆண்டே ஒருவர் பாதிக்கப்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதையும் அந்தக் கட்டுரை விவரிக்கிறது" எனக் கூறினார்.

மூத்த விஞ்ஞானி மாரியப்பன் சிறப்புப் பேட்டி

இந்திய விஞ்ஞானிகள் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் குறித்து செய்து வரும் பல்வேறு ஆராய்ச்சிகள், இன்றைக்கு கரோனா பெருந்தொற்று பரவலுக்கு பாடமாக அமைந்துள்ளதை மாரியப்பன் விளக்கிக் குறிப்பிட்டுள்ளார். வௌவால் மூலமாகப் பரவக்கூடிய வாய்ப்புள்ள பிற வைரஸ்களைக் கட்டுப்படுத்தியது போன்றே கரோனாவையும் முழுமையாக அவர்களால் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்ற விஞ்ஞானி மாரியப்பனின் நம்பிக்கை நமக்கு ஊக்கம் தருவதாகவே உள்ளது.

இதையும் படிங்க:தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீடிப்பு - முதலமைச்சர் பழனிசாமி!

Last Updated : May 1, 2020, 11:33 AM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details