மதுரை:தெற்கு ரயில்வேயின் மதுரைக் கோட்டம் இன்று (ஜூன் 7)வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, "மதுரை கோட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளில் பல்வேறு ரயில்வே திட்டப் பணிகள் விரைவாக நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த 8 ஆண்டுகளில் மதுரை - தேனி, செங்கோட்டை- ஆரியங்காவு உள்பட 94 கி.மீ., தூர ரயில் பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டுள்ளன.
திருச்சி - திண்டுக்கல், திருமங்கலம் - திருநெல்வேலி, வாஞ்சி மணியாச்சி - மீளவிட்டான் ரயில் பாதைத்திட்டங்கள் 282 தூர ரயில் பாதை இரட்டை ரயில் பாதைகளாக மாற்றப்பட்டுள்ளன. மேலும் விருதுநகர் - திருநெல்வேலி, வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி, மதுரை - மானாமதுரை, மானாமதுரை - ராமநாதபுரம், திருச்சி - காரைக்குடி, பழனி - பொள்ளாச்சி, மானாமதுரை - விருதுநகர் உள்பட 410 கி.மீ., தூர ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது. ரயில் பாதை மின்மயமாக்கல் திட்டம் சுற்றுச்சூழலுக்கு உகந்த, விரைவான ரயில் போக்குவரத்தை உறுதி செய்கிறது.