மதுரை: ரயில்வே பணிகளில் சேர விரும்புபவர்கள் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம், அதிகாரப்பூர்வ ரயில்வே பணியாளர் தேர்வாணையம் (RRB) மற்றும் ரயில்வே பணியாளர் தேர்வு முகமை (RRC) ஆகியவற்றின் வாயிலாக மட்டுமே பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் எனத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தென்னக ரயில்வே இன்று (பிப்.5) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ரயில்வே பணிகளில் சேர விரும்புபவர்கள் அதிகாரப்பூர்வமற்ற விளம்பரங்கள் மற்றும் இடைத்தரகர்களை நம்பி அதிக அளவில் பணம் கொடுத்து ஏமாந்து போவதாகச் செய்திகள் ரயில்வே நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது.
ரயில்வே பணிகளில் சேர அதிகாரப்பூர்வ ரயில்வே பணியாளர் தேர்வாணையம் (RRB) மற்றும் ரயில்வே பணியாளர் தேர்வு முகமை (RRC) ஆகியவற்றின் வாயிலாக மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் .
நாட்டிலுள்ள 21 ரயில்வே பணியாளர் தேர்வாணையங்கள் மற்றும் 16 ரயில்வே பணியாளர் தேர்வு முகமைகள் வாயிலாக மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு ரயில்வே பணிகளுக்கு அமர்த்தப்படுகிறார்கள். இவை தவிர வேறு எந்த நிறுவனமும் ரயில்வே பணிக்கு ஆள்களைத் தேர்வு செய்வதில்லை.
ரயில்வேத்துறைக்கு பணியாளர்களைத் தேர்வு செய்ய ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அறிவிப்புகள் விளம்பரங்களாக வெளியிடப்படுகின்றன. எம்பிளாய்மெண்ட் நியூஸ்/ ரோஜ்கார் சமாச்சார் போன்ற அரசு வெளியீடுகளில் முழு வேலைவாய்ப்பு விளம்பரங்களும் மற்றும் பிரபல தேசிய மற்றும் உள்ளூர் நாளிதழ்களில் சிறு விளம்பர குறிப்புகளும் வெளியிடப்படுகிறது.
ரயில்வே இணையதளங்கள்
மேலும் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்புகள் ரயில்வே தேர்வாணைய இணையதளங்களிலும் வெளியிடப்படுகின்றன. விளம்பரங்களில் அதிகாரப்பூர்வ தேர்வாணைய இணைய தள முகவரிகளும் வெளியிடப்படுகின்றன. சமூக ஊடகங்களில் வெளியாகும் ரயில்வே வேலைவாய்ப்பு செய்திகளை ரயில்வே தேர்வாணைய இணையதளங்கள் மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம்.