மதுரை: தெற்கு ரயில்வே அறிவிப்பில், மானாமதுரை, மேல கொன்னகுளம், திண்டுக்கல், அம்பாத்துரை ராஜபாளையம், சங்கரன் கோவில் மற்றும் சூடியூர், பரமக்குடி ரயில் நிலையங்கள் இடையே செப்டம்பர் மாதத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. இதன் காரணமாக ராமேஸ்வரம் முதல் மதுரை வரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06652) செப்டம்பர் 2 முதல் செப்டம்பர் 15 வரை வியாழக்கிழமைகள் தவிர ராமேஸ்வரத்தில் இருந்து காலை 11.00 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 01.30 மணிக்கு 150 நிமிடங்கள் காலதாமதமாகவும், மதுரை முதல் ராமேஸ்வரம் சிறப்பு ரயில் (06653) மதுரையிலிருந்து மதியம் 12.30 மணிக்கு பதிலாக மதியம் 01.10 மணிக்கு 40 நிமிடங்கள் தாமதமாகவும் புறப்படும்.
மேலும் திருச்சியிலிருந்து மானாமதுரை, திருச்சி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் (06829, 06830) செப்டம்பர் 3 முதல் செப்டம்பர் 15 வரை ஞாயிற்றுக்கிழமைகள் தவிர சிவகங்கை, மானாமதுரை ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.
திண்டுக்கல், அம்பாத்துரை ரயில் நிலையங்களுக்கிடையே நடைபெறப்போகும் பராமரிப்பு பணிகளால் செப்டம்பர் 2 முதல் செப்டம்பர் 15 வரை செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் கோயம்புத்தூர் முதல் நாகர்கோவில் பகல் நேர விரைவு ரயில் (16322) 90 நிமிடங்கள் காலதாமதமாக இயக்கப்படும். இதே காலத்தில் சென்னை முதல் குருவாயூர் விரைவு ரயில் (16127) மதுரை கோட்டப் பகுதியில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் 70 நிமிடங்கள் காலதாமதமாகவும் வெள்ளிக்கிழமைகளில் 95 நிமிடங்கள் கால தாமதமாகவும் இயக்கப்படும்.