மதுரை:2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை நெல்லை - தாம்பரம் ஞாயிற்றுக்கிழமைதோறும் மற்றும் தாம்பரம் - நெல்லை திங்கள்கிழமைதோறும் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. அதேபோல் செப்டம்பர் முதல் ஜனவரி வரை வியாழக்கிழமைதோறும் நெல்லை - மேட்டுப்பாளையம், வெள்ளிக்கிழமைதோறும் மேட்டுப்பாளையம் - நெல்லை இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
இந்த ரயில்கள் அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி, விருதுநகர், மதுரை மற்றும் திண்டுக்கல் வழியாக இயக்கப்பட்டன. இந்த வாராந்திர சிறப்பு ரயில்களுக்கு பயணிகளிடையே சிறப்பான வரவேற்பு இருந்தது. இந்த நிலையில், இந்த சிறப்பு ரயில்களுக்கான வருமானம் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை குறித்து தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்டிஐ ஆர்.பாண்டியராஜா என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் கோரியிருந்தார்.
அதற்கு தெற்கு ரயில்வே அளித்த பதிலில், வண்டி எண் 06004 கொண்ட நெல்லை - தாம்பரம் ரயில் 17,303 பயணிகளுடன் 1.14 கோடி ரூபாய் வருமானமும், வண்டி எண் 06003 கொண்ட தாம்பரம்- திருநெல்வேலி ரயில் 16,214 பயணிகளுடன் 97.61 லட்சம் ரூபாய் வருமானமும் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.
அதேபோல் 06030 என்ற எண் கொண்ட திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் ரயில் 15,189 பயணிகளுடன் 69.5 லட்சம் ரூபாய் வருமானமும், 06029 என்ற எண் கொண்ட மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி ரயில் 18,978 பயணிகளுடன் 86.54 லட்சம் ரூபாய் வருமானமும் ஈட்டியுள்ளது. இவ்வாறு 5 மாதங்களில் இரு மார்க்கங்களிலும் இயக்கப்பட்ட இந்த 2 வாராந்திர சிறப்பு ரயில்களையும் சேர்த்து மொத்தம் 67,679 பயணிகளுடன் 3.7 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
எனவே வருமானம் ஈட்டும் இந்த அம்பை, தென்காசி, ராஜபாளையம் வழித்தடத்தின் வழியாக சென்னை மற்றும் கோவை மேட்டுப்பாளையத்திற்கு இயக்கப்படும் இந்த இரு வாராந்திர சிறப்பு ரயில்களையும் தொடர்ந்து இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.