மதுரை:ரயில் பயணிகளின் வசதிக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ரயில் மடாட் எனும் தளம் வாயிலாக இதுவரை 80 ஆயிரத்து 902 குறைகள் தீர்க்கப்பட்டுள்ளதாகவும், கடந்த அக்டோபர் மாதம் மட்டும் 14 ஆயிரத்து 826 குறைகள் தீர்க்கப்பட்டு, பயணிகளுக்கு சேவை புரிந்துள்ளதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ரயில் மடாட் பயணிகளுக்கு அவர்களின் புகார்களை விரைவாகத் தீர்க்க பயணத்தின்போது இணையம், ஆப், எஸ்எம்எஸ், சமூக ஊடகங்கள் மற்றும் ஹெல்ப்லைன் எண் (139) போன்ற பல தேர்வுகளை வழங்குகிறது. மேலும் ரயில் மடாட் (RailMadad) போர்ட்டல், பயணிகளின் குறைகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ரயில் மடாடில்குறைகளை இடுவதற்கான பல்வேறு முறைகள்:மொபைல் பயன்பாடு, இணையம், எஸ்.எம்.எஸ், மின்னஞ்சல் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் புகார்களை பதிவு செய்ய பயணிகளுக்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளன. இருப்பினும், வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் ரயில் மடாட் ஹெல்ப்லைன் எண் 139, பயணிகளின் குறைகளை பதிவு செய்வதற்கு விருப்பமான தேர்வாக உள்ளது.
தெற்கு ரயில்வேயில் 51 சதவீதத்துக்கும் அதிகமான புகார்கள் ரயில் மடாட் ஹெல்ப்லைன் எண் 139 மூலமாகவும், 25 சதவீதம் ரயில் மடாட் இணையதளத்தின் மூலமாகவும், 4.5 சதவீதம் சமூக ஊடகங்கள் மூலமாகவும், 19 சதவீதம் ரயில் மடாட் ஆப் மூலமாகவும், மீதமுள்ளவை 139-க்கு SMS, மின்னஞ்சல், CPGRAMS போன்ற குறைதீர்ப்பு போர்டல் வாயிலகவும் பெறப்படுகின்றன.
ரயில் மடாடின் செயல்திறன்:தெற்கு ரயில்வேயில் நடப்பு நிதியாண்டில் 2023-2024 நவம்பர் 9 வரை, மொத்தம் 80 ஆயிரத்து 915 புகார்கள் ரயில்மடாடில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 80 ஆயிரத்து 902 குறைகள் பூர்த்தி செய்யப்பட்டு, சராசரியாக 99.98 சதவீதம் குறைதீர்ப்பு விகிதத்தை எட்டியுள்ளது.
2023 அக்டோபர் மாதத்தில் மட்டும், மொத்தம் 14 ஆயிரத்து 826 புகார்கள் ரயில்மடாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், தெற்கு ரயில்வே சராசரியாக 36 நிமிடங்களுக்குள் மேற்கண்ட குறைகளுக்கு தீர்வு கண்டுள்ளது. அதில் குறிப்பிடத்தக்க வகையில், மருத்துவ அவசரநிலை மற்றும் பாதுகாப்பு உதவியின்போது தீர்வு காணப்பட்டுள்ளது.
மற்ற ரயில்வே போர்டல்களுடன் ரயில் மடாடின் ஒருங்கிணைப்பு:ரயில் மடாட் போர்ட்டல், மற்ற ரயில்வே தளங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இது புகார்களை விரைவாக தீர்க்க உதவும் தரவுகளை நிகழ்நேரத்தில் சேகரிக்கிறது. ரயில்மடாட் ஒருங்கிணைந்த பயிற்சி மேலாண்மை அமைப்புடன் (ICMS) ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.