மதுரை: காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் உள்ள பழங்கால தொடர்புகளை மீட்டெடுக்கும் வகையில் காசி தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சி நவம்பர் 16 முதல் டிசம்பர் 19 வரை காசியில் நடைபெற இருக்கிறது.
இலக்கியம், பழங்கால நூல்கள், தத்துவம், ஆன்மீகம், இசை நடனம், நாடகம், யோகா, ஆயுர்வேதம், கைத்தறி, கைவினைப் பொருட்கள் மற்றும் நவீன கண்டுபிடிப்புகள் வர்த்தகம் போன்ற பல்வேறு அம்சங்களை பற்றிய கருத்தரங்கு, விவாதம், விரிவுரை போன்றவை இந்த சங்கமத்தில் நடைபெற இருக்கின்றன.
தமிழ்நாட்டின் கலை, கலாச்சாரம், உணவு வகைகள், கைத்தறி கைவினை பொருட்கள் ஆகியவை அடங்கிய பொருட்காட்சி நடைபெற இருக்கிறது. பரதநாட்டியம், கர்நாடக இசை தமிழ் இசை, தமிழ் நாட்டுப்புற இசை, நாதஸ்வர கச்சேரி, தேவாரம் போன்ற கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
தமிழிசை வடிவில் திருவாசகம், கம்பராமாயண உரை, வில்லுப்பாட்டு, பொம்மலாட்டம், சிலம்பாட்டம், காவடி ஆட்டம், கரகம், பட்டிமன்றம், தமிழ் நாட்டுப்புற நடனங்கள், பொய்க்கால் குதிரை, தப்பாட்டம் போன்றவை காசியில் உள்ள மக்கள் ரசிப்பதற்காக அரங்கேற்றப்பட இருக்கின்றன.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழ்நாட்டில் இருந்து மாணவர்கள், இலக்கியவாதிகள், இசை, நடனம், நாடகம், நாட்டுப்புற கலை, யோகா, ஆயுர்வேதம் சார்ந்த கலாச்சார வல்லுநர்கள், தொழில் முனைவோர், தங்கும் விடுதி உரிமையாளர்கள், கைவினைஞர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், வலைப்பதிவர்கள் கலந்துக்கொள்ள இருக்கிறார்கள். இதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து கலைஞர்கள் காசிக்கு செல்ல இருக்கிறார்கள்
அவர்களின் வசதிக்காக நவம்பர் 16, 23, 30 டிசம்பர் 7 மற்றும் 14 ஆகிய நாட்களில் ராமேஸ்வரம் - பனாரஸ் விரைவு ரயிலில் (22535) 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்பட இருக்கின்றன. மறு மார்க்கத்தில் நவம்பர் 27 டிசம்பர் 4, 11 மற்றும் 18 ஆகிய நாட்களில் பனாரஸ் - ராமேஸ்வரம் விரைவு ரயிலில் (22536) 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்பட இருக்கின்றன.
இதே போல சென்னை, கோயம்புத்தூர் கலைஞர்களின் வசதிக்காக எர்ணாகுளம் - பாட்னா விரைவு ரயில், டாக்டர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - கயா விரைவு ரயில், பாடலிபுத்திரம் - பெங்களூர் விரைவு ரயில் ஆகியவற்றில் முறையே 3 குளிர்சாதன மூன்றெழுத்து படுக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: திருக்கார்த்திகை தீபதிருவிழா...அமைச்சர் சேகர்பாபு, எவ.வேலு ஆலோசனை