மதுரை: ரயில்வே ஊழியர்களின் பணிகளை அங்கீகரிக்கும் விதமாக மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும், ரயில்வேயின் பல்வேறு மட்டங்களில் பணியாற்றும் 100 சிறந்த பணியாளர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு அதி விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார் (Ati Vishisht Rail Seva Puraskar) விருதினை வழங்கி கௌரவித்து வருகிறது. இந்த விருதுகள் வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள 69ஆவது ரயில்வே வாரவிழாவில் வழங்கப்பட உள்ளது. ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இந்த விருதுகளை வழங்குகிறார்.
இந்த விருதுக்காக தெற்கு ரயில்வேயில் பணியாற்றும் இரண்டு அதிகாரிகள் உள்பட ஒன்பது பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் வர்த்தக திறன் மற்றும் பாதுகாப்புத் திறனுக்கான சாம்பியன்ஷிப் விருதினை தெற்கு ரயில்வே, கிழக்கு கடற்கரை ரயில்வேயுடனும், வடகிழக்கு எல்லைப்புற ரயில்வேயுடனும் இணைந்து பகிர்ந்து கொள்கிறது.
விருதினைப் பெறுபவர்கள்: மானாமதுரை தண்டவாளப் பாதையில் கண்காணிப்புப் பணி மேற்கொண்டிருந்தபோது, பழுதடைந்தநிலையில் தண்டவாளம் இருப்பதைக் கண்டறிந்து உடனடியாக தகவல் கொடுத்து சென்னை - ராமேஸ்வரம் (வ.எண்.16851) எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு ஏற்படவிருந்த பெரும் விபத்து தவிர்க்க உதவிய ரயில்வே பணியாளர் (Track Maintainer GR II) கே.வீரபெருமாள் இந்த விருதைப் பெறுகிறார்.
இதேபோல, எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கியபோது, தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த யானையைப் பார்த்த மாத்திரத்தில் அவசரக்கால பிரேக்கைப் பயன்படுத்தி ரயில் தடம் புரள்வதைத் தவிர்த்ததுடன், யானையின் உயிரையும் காப்பாற்றிய எம்.கே.சுதீஷ்குமார் (Loco Pilot Passenger) இந்த விருதைப் பெறுகிறார்.
இவர்களோடு இணைந்து, டிக்கெட் ஆய்வாளர் (Dy Chief Ticket Inspector) டி.செல்வகுமார், ரயில்வே குற்ற வழக்குகளைத் திறமையோடு கையாண்ட ரயில்வே காவல் ஆய்வாளர் (RPF Inspector) ஸ்ரீதேஷிதி மதுசூதன ரெட்டி, ஆவடி எமு கார் ஷெட் சீனியர் பிரிவு பொறியாளர் (Senior Section Engineer) ஏ.செல்வராஜா, பெரம்பூர் ரயில்வே மருத்துவமனை தலைமை செவிலியர் (Chief Nursing Superintendent) துர்காதேவி விஜயகுமார் விருதை பெறுகின்றனர்.
மேலும், முதுநிலைக் கோட்ட வணிக மேலாளர் (Sr Divisional Commercial Manager) இ.ஹரிகிருஷ்ணன், முதுநிலை கோட்டப் பொறியாளர் (Sr. Divisional Engineer) எஸ்.மயிலேறி, ரயில்வே தகவல் தொழில்நுட்ப அலுவலர் (Assistant Signal & Telecommunication Engineer) எஸ்.மாரியப்பன் ஆகியோர் தெற்கு ரயில்வேயின் சார்பாக அதி விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார் விருதினைப் பெறுகின்றனர்.
இதையும் படிங்க:"2040க்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்பத் திட்டம்" - இஸ்ரோ தலைவர் சோம்நாத்!