மதுரை: திருநெல்வேலியில் இருந்து மதுரை, திண்டுக்கல், கரூர் வழியாக ஈரோடு செல்லும் நெல்லை - ஈரோடு ரயிலை அம்பை, பாவூர்சத்திரம் வழியாக செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டுமென்று பயணிகள் கோரிக்கை விடுத்த நிலையில், தற்போது ரயில்வே வாரியம் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
அதாவது நூற்றாண்டு பெருமை கொண்ட தென்காசி - நெல்லை ரயில் வழித்தடத்தில் மதுரைக்கு செல்ல ரயில்களே இல்லை என்ற பெரிய குறை இருந்து வந்தது. பாவூர்சத்திரம், கடையம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி பகுதி மக்களும் அதன் சுற்றுவட்டார மக்களும் பல்வேறு வேலை நிமித்தமாகவும், மதுரை உயர்நீதிமன்ற கிளை, மருத்துவமனைகள், மத்திய மாநில அரசு அலுவலகங்கள் போன்றவற்றிற்கு சென்று வருகின்றனர்.
தென்காசி - நெல்லை வழித்தடத்தில் நேரடியாக, மதுரைக்கு இதுவரை ஒரு ரயிலும் இயக்கப்படவில்லை என்பதால் பயணிகள் அதிக சிரமப்பட்டு பேருந்துகளில் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். இந்த நிலையில், நெல்லை - ஈரோடு ரயிலை செங்கோட்டைக்கு நீட்டிப்பு செய்வதால், காலையில் திருநெல்வேலியில் இருந்து புறப்படும் வண்டி எண் 06673 திருச்செந்தூர் விரைவு ரயிலை மக்கள் எளிதாக பயன்படுத்த முடியும்.
மேலும் புதன்கிழமை தோறும் 22630 தாதர் விரைவு ரயிலுக்கும், ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளில் மும்பைக்கு இயக்கப்படும் வண்டி எண் 16352 பாலாஜி விரைவு ரயிலுக்கும் திங்கள், செவ்வாய், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மும்பைக்கு இயக்கப்படும் வண்டி எண் 16340 ரயிலுக்கும் இந்த ரயில் இணைப்பு ரயிலாக அமையும்.
மறு மார்க்கத்தில் வண்டி எண் 16845 ஈரோடு - திருநெல்வேலி ரயிலானது இரவு 8.30 மணிக்கு மேல் திருநெல்வேலி - தென்காசி வழித்தட பொதுமக்களுக்கு ஓர் இரவு நேர ரயிலாக இயங்க உள்ளது. நெல்லை - ஈரோடு ரயிலை செங்கோட்டைக்கு நீட்டிப்பதால் நெல்லை ரயில் நிலையத்தில் ஏற்படும் இடநெருக்கடி சற்று குறையும் எனவும் கூறப்படுகிறது.