மதுரை:தெற்கு ரயில்வே மதுரை மண்டலத்திற்குஉட்பட்டவிருதுநகர் மற்றும் திருநெல்வேலி ரயில் நிலையங்களில் இரட்டை ரயில் பாதையில் ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த ரயில் நிலையங்களுக்கு அருகில் உள்ள சிவகாசி, சேரன்மகாதேவி, செய்துங்கநல்லூர் ஆகிய ரயில் நிலையங்களில் விருதுநகர், திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இணையான போக்குவரத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் (Traffic Block and the commissioning of new blocks) நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, அக்டோபர் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் பாலக்காடு - திருச்செந்தூர் ரயில் (16731) மற்றும் திருச்செந்தூர் - பாலக்காடு ரயில் (16732) ஆகியவை கோவில்பட்டி - திருச்செந்தூர் இடையே தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் அக்டோபர் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் செங்கோட்டை - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06684) மற்றும் திருநெல்வேலி - செங்கோட்டைச் சிறப்பு ரயில் (06687) ஆகியவை சேரன்மகாதேவி - திருநெல்வேலி இடையே தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.