தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மதுரையின் அடையாளமான கடம்ப மரங்களைக் காப்போம்' - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல் - Kadamba trees

'மதுரையின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் கடம்ப மரங்கள்' தற்போது அழிந்து வரும் சூழலில், அவற்றைக் காக்க வேண்டியது நம் கடமையாகும் என கடம்ப மரத்தைக் காக்கும் இயற்கை ஊடக நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

'மதுரையின் அடையாளமான கடம்ப மரங்களைக் காப்போம்'-சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
'மதுரையின் அடையாளமான கடம்ப மரங்களைக் காப்போம்'-சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

By

Published : Dec 23, 2022, 10:58 PM IST

'மதுரையின் அடையாளமான கடம்ப மரங்களைக் காப்போம்'-சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

மதுரை:காமராஜர் பல்கலைக்கழகம் மொழியியல் மற்றும் தொடர்பியல் துறை மற்றும் திருநகர் பக்கம் ஆகியவை இணைந்து மதுரை 'கடம்பர மரச்சூழல் மரபும் எதிர்காலச் செயல்பாடுகளும்’ என்ற தலைப்பிலான இயற்கை ஊடக நிகழ்ச்சி செக்காணூரணி அருகேயுள்ள கொங்கர்புளியங்குளம் கடம்பூரணி கரையில் அமைந்துள்ள கடம்ப மரத்தின் அடியில் நடைபெற்றது. இதில் மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணைவேந்தர் ஜா.குமார் தலைமை உரையாற்றினார்.

அவர் பேசும்போது, 'மரங்களைப் பாதுகாப்பது என்பது தனிப்பட்ட முயற்சி என்பதைத் தாண்டி சமூகக் கடமையாக மாற வேண்டும். கடம்பு போன்ற மரங்களைப் பாதுகாப்பதற்கான அடுத்த கட்ட முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும். நவீன திசு வளர்ப்பு முறைகளையும் நாம் பின்பற்றலாம்.

பல்கலைக்கழகங்களில் ஆய்வுப் பூங்காக்கள் அமைக்க தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. தற்போது சென்னையில் உள்ளது. ஆய்வு மையங்களும் பல்கலைக்கழகங்களும் இதுபோன்ற ஆய்வுகளை மேற்கொள்ளும்போது அது சமூகத்திற்குப் பயன்பட வேண்டும் என்பதுதான் இந்த ஆய்வுப் பூங்காவின் நோக்கம்.

இதுபோன்று மரங்களை வளர்ப்பதற்கான முயற்சிகளில் நாம் ஈடுபடும்போது அவையெல்லாம் எவ்வாறு பராமரிக்கப்பட வேண்டும் என்பதும் கூட அவசியம்தான். பல்கலைக்கழகம் சார்பாக ’அடவி’ என்ற பெயரில் காடு ஒன்றை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதில் சில தவறுகள் காரணமாக, அந்த மரங்கள் தொடர்ந்து வளரவில்லை. ஆகையால், அந்த மண்ணில் எந்த மாதிரியான தாவரம் வளரும் என்பதையும் கணக்கிற்கொண்டு நாம் செயல்படுவது அவசியம்' என்றார்.

'மதுரையின் அடையாளமான கடம்ப மரங்களைக் காப்போம்' - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

மொழியியல் மற்றும் தொடர்பியல் துறைத் தலைவர் முனைவர் நாகரத்தினம் கூறுகையில், 'கடம்ப மரங்கள் குறித்த சான்றுகள் நமது பண்டைய இலக்கியங்களில் குறிப்பாக சிலப்பதிகாரத்தில் காணப்படுகிறது. அன்றைய காலகட்டத்தில் மதுரையில் கடம்ப மரங்கள் மிக வளம் செறிந்து காணப்பட்டிருக்கின்றன. கடந்த 12 நூற்றாண்டுகளில்தான் கடம்ப மரங்கள் மதுரையில் பெரும் அழிவைச் சந்தித்திருக்கின்றன' என்றார்.

பல்கலைக்கழக பதிவாளர் சிவக்குமார், தாவர உயிரித் தொழில் நுட்பவியல் துறையின் உதவிப் பேராசிரியர் ஸ்ரீதேவி, மூலக்கூறு உயிரியில் துறை தலைவர் ரமேஷ், தாவரவியல் பேராசிரியர் பாபுராஜ், கொங்கர் புளியங்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் சிவகாமி தர்மர், திருநகர் பக்கம் அமைப்பின் தலைவர் விஷ்வநாத், நறுங்கடம்பு என்ற நூலின் ஆசிரியர் கார்த்திகேயன் ஆகியோர் உரையாற்றினர்.

இதையும் படிங்க:பொங்கல் பரிசுத்தொகுப்பில் செங்கரும்பு இல்லை - விவசாயிகள் வேதனை

ABOUT THE AUTHOR

...view details