மதுரை திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரி ரோடு முனியாண்டிபுரம் குடியிருப்புப் பகுதியில் ஒரு நல்ல பாம்பு நகர்ந்து செல்ல முடியாமல் கிடந்தது. அதன் உடலில் காயங்கள் இருந்ததால், அது உயிருக்குப் போராடியது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள், திருநகரைச் சேர்ந்த 'ஊர்வனம்' என்ற அமைப்புக்குத் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அதன் பொறுப்பாளர்கள், அங்கு வந்து அந்த பாம்பை லாவகமாக மீட்டனர்.
பின்னர் அவர்கள் மதுரை தல்லாகுளத்தில் உள்ள பன்நோக்கு கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இதைத்தொடர்ந்து டாக்டர் பார்த்திபன் தலைமையிலான கால்நடை மருத்துவக் குழுவினர், அந்த பாம்பை பரிசோதித்தனர். உடனடியாக முதல் உதவியும் அளிக்கப்பட்டது.
அந்த நல்ல பாம்பை காப்பாற்ற, காயம் பட்ட இடத்தில் அறுவை சிகிச்சை செய்தாக வேண்டிய நிலை ஏற்பட்டது. உடனடியாக கால்நடை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர், அந்தப் பாம்புக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். இரண்டு மணி நேரம் இந்த சிகிச்சை நடந்தது. பின்னர் அந்த பாம்பை மீண்டும் 'ஊர்வனம்’ அமைப்பினரிடம் ஒப்படைத்தனர்.