மதுரை: வடக்கு மாசி வீதியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன். இவர் சந்தையில் இருந்து கிர் வகை பசு மாட்டினை வாங்கி வீட்டில் வளர்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் பசு கருவுற்று கன்று ஈன்ற பின்னரும் கூட, வயிறு பெரிதாக வீங்கி இருந்துள்ளது. எனவே கடந்த மாதம் 23ஆம் தேதி, தல்லாகுளத்தில் உள்ள கால்நடை மருத்துவமனையில் மாட்டை சிகிச்சைக்கு அழைத்து வந்துள்ளார்.
அங்கு மதுரை மாவட்ட தலைமை கால்நடை மருத்துவர் வைரசாமி தலைமையிலான மருத்துவக்குழுவினர், பசு மாட்டின் வயிற்றுப் பகுதியை ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது மாட்டின் வயிற்றில் பிளாஸ்டிக் குப்பைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து மாட்டுக்கு மயக்க மருந்து கொடுத்த மருத்துவர்கள், 4 மணி நேர தொடர் அறுவை சிகிச்சை செய்தனர்.
கருவுற்ற பசு மாட்டின் வயிற்றில் இருந்து 65 கிலோ பிளாஸ்டிக்கை மருத்துவர்கள் அகற்றி உள்ளனர் இதில் பசுவின் வயிற்றுப் பகுதியில் இருந்த 65 கிலோ அளவிலான பிளாஸ்டிக் குப்பைகள், சாக்கு பைகள் மற்றும் துணிகள் ஆகியவை அகற்றப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் வைரசாமி, “பசுவின் வயிற்றில் இருந்து 65 கிலோ கழிவுகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு, தற்போது நல்ல உடல் நலத்துடன் உள்ளது.
மாடுகளை வளர்ப்பவர்கள் சாலைகளில் மேய விடுவதால் இது போன்று பிளாஸ்டிக் கழிவுகள் சாப்பிட்டு உடல் நல பிரச்னைகள் உருவாகும். எனவே மாடுகளை சாலைகளில் விடுவதை அதன் உரிமையாளர்கள் தவிர்க்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க:எலியின் மரணத்திற்கு நீதி வேண்டும்.. விலங்கு நல பிரியர் புகார்