மதுரை: சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் கட்சி நிர்வாகியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று (மார்ச் 4) மதுரை வந்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான அணிகள் இன்னும் அமையவில்லை. இந்த அணிகள் அமைந்த பின்பு தான் தேர்தல் குறித்து கணிக்க முடியும்.
வட கிழக்கு மாநிலங்களின் தேர்தல் முடிவுகளை வைத்து பொதுத் தேர்தலை கணிக்க முடியாது. ஈரோடு இடை தேர்தல் முடிவுகளை பொறுத்தவரை ஆளுங்கட்சியினருக்கு தான் முடிவுகள் சாதகமாக இருக்கும். தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சியினருக்கும் கூட்டணி கட்சியினருக்கும் ஒரு பூஸ்ட். இந்திய அளவில் பாஜகவை எதிர்த்து ஒரு கூட்டணி அமைய வேண்டும் என்றால் அந்தக் கூட்டணிக்கு அச்சாரமாக காங்கிரஸ் இருக்க வேண்டும் என்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கருத்தை நான் முழுவதுமாக ஆதரிக்கிறேன் எனத் தெரிவித்தார்.
முதலமைச்சர் வேட்பாளராக முக.. ஸ்டாலின் ஏன் இருக்கக் கூடாது என்று காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் ஃபருக் அப்துல்லா கூறிய கருத்துக்கு பதில் அளித்த கார்த்திக் சிதம்பரம், பிரதமர் வேட்பாளராக முதலமைச்சர் ஸ்டாலின் பேசப்படுவதில் தவறு கிடையாது என்றும், மாநில முதலமைச்சராக இருந்தவர்கள் இந்தியாவிற்கு பிரதமராக ஆகியுள்ளனர் என்றும் பிரதமர் மோடியை குறிப்பிட்டு பேசினார். மேலும் அவர் மாநில முதலமைச்சர் இந்தியாவிற்கு பிரதமராக வேண்டும் என்று அக்கட்சி எண்ணுவதில் எந்தவித தவறும் இல்லை என்றார்.