மதுரை:சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சின்னையா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றினைத் தாக்கல்செய்தார்.
அந்த மனுவில், "சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா அருகே உள்ள புன்னங்குடி கிராமத்தில் கூடணி கண்மாய், புது கண்மாய், பெரிய கண்மாய் ஆகிய மூன்று கண்மாய்களில் குடிமராமத்துப் பணிக்காக ரூபாய் 80 லட்சம் தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது.
இந்தக் கண்மாய்களில் தண்ணீர்ப் பயன்பாட்டுக் கூட்டமைப்பு மூலமாக குடிமராமத்துப் பணிகள் நடைபெறுகிறது. குடிமராமத்துப் பணிகள் ஆயகட்டுதாரர்கள் மூலம் நடைபெற வேண்டும். ஆனால் இந்தக் கூட்டமைப்பு ஒரு சில தனி நபர்களைக் கொண்ட கூட்டமைப்பாகும்.
எனவே கூடணி கண்மாய், புது கண்மாய், பெரிய கண்மாய் ஆகிய மூன்று கண்மாய்களில் குடிமராமத்துப் பணிகள் அப்பகுதியில் உள்ள ஆயகட்டுதாரர்கள் மூலம் நடைபெற உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும் தற்போது நடைபெற்றுள்ள குடிமராமத்துப் பணிகளின் நிலை அறிக்கையை அலுவலர்கள் தாக்கல்செய்ய உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோரின் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு சம்பந்தமாகப் பொதுப்பணித் துறை முதன்மைச் செயலர், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.