மதுரை: சிவகங்கை உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளி (சென் ஜோசப்) சார்பாக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அரசு உதவி பெறும் எங்கள் பள்ளியில் ஆசிரியர் காலி பணியிடத்தை கருத்தில் கொண்டு ஒரு ஆசிரியர் கடந்த 2012 ஆம் ஆண்டு நியமனம் செய்யபட்டது.
இந்த நியமனத்திற்கான அங்கீகாரம் வழங்க கோரி மாவட்ட கல்வி அலுவலருக்கு விண்ணப்பித்திருந்தோம். ஆனால் எங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. நிராகரிக்கப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் (DEO) உத்தரவை ரத்து செய்து ஆசிரியைக்கு பணி நிரந்தரம் மற்றும் பணி செய்ததற்கான ஊதியத்தை கணக்கிட்டு பண பலன் வழங்க உத்தரவிட கோரி கடந்த 2015 ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரணை செய்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, ஆசிரியை பணி நிரந்தரம் மற்றும் பண பலன்களை வழங்க உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீட்டு வழக்கிற்கு நீதிமன்றம் எந்த தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை.
எனவே நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மாவட்ட கல்வி அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 2019 ஆண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதை விசாரணை செய்த நீதிபதி இந்த வழக்கில், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மாவட்ட கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்து இருந்தார்.