கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருந்தாக ரெம்டெசிவிர் கூறப்படும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் ரெம்டெசிவிர் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
மதுரையில் மே 8ஆம் தேதி முதல் தமிழ்நாடு மருத்துவ கழகம் சார்பில் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நாள் ஒன்றுக்கு 500 புட்டிகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மருந்தை வாங்க தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் அதிகாலை முதலே மருத்துவக் கல்லூரி முன்பாக வரிசையில் நின்று வாங்கி வந்தனர்.
தமிழ்நாடு முழுவதும் ரெம்டெசிவிர் மருந்துகள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து மே 17ஆம் தேதி முதல் மதுரை மருத்துவக் கல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை கிடையாது என தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் இன்று விற்பனைக்கு ரெம்டெசிவிர் மருந்து வரும் என்ற எதிர்பார்ப்பில் அதிகாலையில் இருந்து 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காத்திருந்தனர். நீண்ட நேரமாக மருந்து விற்பனை செய்யப்படாத காரணத்தால் காத்திருந்த பொதுமக்கள் மதுரை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களுடன் காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்தையைத் தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.