குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் சிறப்பு சார்பு ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில், சக்காரியா, அல்ஹபீப் இருவரையும் சேர்க்க போலீஸார் முயற்சிப்பதாக புகார் மனு அளிக்கப்பட்டது.
நெல்பேட்டையைச் சேர்ந்த பஷீர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆட்கொணர்வு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "என் மூத்த சகோதரர் சக்காரியா, இளைய சகோதரர் அல்ஹபீப். இவர்கள் மீது எந்த வழக்கும் இல்லை. ஜனவரி 3இல் நெல்லை கியூ பிராஞ்ச் காவல் ஆய்வாளர் எங்கள் வீட்டிற்கு வந்து சக்காரியாவை விசாரணைக்காக அழைத்துச் சென்றார்.
அப்போது காவல்துறையினர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து சகோதரர்களின் அனைத்து சான்றிதழ்களையும் எடுத்துச் சென்றனர். ஜனவரி 8இல் சக்காரியாவை போலீஸார் அனுப்பிவிட்டனர். அல்ஹபீப்பை விசாரணைக்கு ஆஜர்படுத்த உத்தரவிட்டனர்.
இதையடுத்து அல்ஹபீப் ஜனவரி 9இல் விசாரணைக்காக கியூ பிராஞ்ச் அலுவலகம் சென்றார். அவரை மறுநாள் விட்டனர். அதே நாளில் 5 போலீஸார் எங்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து சகோதரர்களை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றனர். தற்போது அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் சிறப்பு சார்பு ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் என் சகோதரர்கள் இருவரையும் சேர்க்க போலீஸார் முயற்சிப்பதாக தெரிகிறது. இருவரையும் விடுதலை செய்யக்கோரி ஜனவரி 11இல் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு மனு அனுப்பினோம்.
இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. சகோதரர்களின் உயிருக்கு போலீஸாரால் அச்சுறுத்தல் உள்ளது. எனவே சக்காரியா, அல்ஹபீப் ஆகியோரை ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு, இது தொடர்பாக அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.