மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளைகள் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “கடந்த டிசம்பர் 2020ஆம் ஆண்டு எங்களது பகுதியில் வசிக்கக்கூடிய நவர் எனது 7 வயது மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்தார். இது குறித்து பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் போக்சோ சிறப்பு வழக்கில் அவரை கைது செய்தனர்.
ராமநாதபுரம் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், எனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டு குற்றவாளிக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட எனது மகளுக்கு ஒரு லட்சம் ரூபாயும் வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த ஒரு லட்சத்தை ஒரு மாதத்திற்குள் எங்களுக்கு வழங்க மார்ச் 2022ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்துறை செயலருக்கு நாங்கள் மனு அனுப்பினோம்.
இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே வறுமையில் வாடும் எனது குடும்பத்திற்கு நீதிமன்ற உத்தரவின்படி ஒரு லட்சம் ரூபாயை வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார். இந்த மனு உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் நீதிபதி புகழேந்தி அமர்வில் இன்று (செப்.22) விசாரணைக்கு வந்தது.